30% தனியார் பள்ளி மாணவர்களுக்கு உடல்பருமன்!
தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் 30 சதவிகிதம் பேருக்கு உடல் பருமன் பிரச்சினை இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சர் கங்கா ராம் என்ற தனியார் மருத்துவமனை நடத்திய சுகாதார ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. அந்த மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் லலிதா பல்லா மற்றும் அவரது குழுவினர் இதில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின்படி, குழந்தைகளில் அதிகமானோருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் நடத்தையில் குறைபாடுகள் ஆகிய பாதிப்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 10 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளில் 10 சதவிகிதம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதும், இதற்கு அந்தக் குழந்தைகளின் உணவுப் பழக்கமே காரணம் என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பல பள்ளிகளில், அங்கு படிக்கும் குழந்தைகளிடம் ஆரோக்கியமற்ற உணவு உண்ணும் பழக்கம் இருப்பது குறித்த விழிப்புணர்வு இல்லை. பள்ளியிலுள்ள உணவகங்களில் அதிக கலோரிகள் கொண்ட குளிர்பானங்கள், கொழுப்பு நிறைந்த தின்பண்டங்கள் விற்கப்படுகின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர், உடனடியாக அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மேற்கொண்டதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சர் கங்கா ராம் மருத்துவமனை சார்பில் இளம்தலைமுறையினர் உடல் பருமனாக இருப்பது குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் மக்களவையின் பாஜக கொறடா அனுராக் தாக்கூர், கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது சர் கங்கா ராம் மருத்துவமனையில் 2010ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை எடைக்குறைப்பு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட 1,078 பேர் குறித்த பகுப்பாய்வு சமர்ப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து டாக்டர் சுதிர் கல்ஹன் கூறுகையில், அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளில் 23 சதவிகிதம் பேருக்கு, அவர்களது குழந்தைப் பருவம், வளரிளம் பருவத்தில் உடல் பருமன் இருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தார். “அவர்களுக்கு இருந்த நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம், தூக்கத்தில் மூச்சுத்திணறல், மலட்டுத்தன்மை போன்ற மருத்துவக் காரணங்களால் அவர்கள் உடல் எடைக்குறைப்பு அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். உடல் பருமனான குழந்தைகள் அழகாக இருப்பதாகக் கருதப்படுகின்றனர். ஆனால், அதுவே அவர்களின் பிற்கால வாழ்க்கையில் உடல் ரீதியிலான பிரச்னைகளுக்கு இட்டுச் செல்கின்றன” என்று அவர் கூறினார்.

Share this

0 Comment to "30% தனியார் பள்ளி மாணவர்களுக்கு உடல்பருமன்!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...