உடற்கல்வி அதிகாரி பணியிடங்கள் காலி : மாவட்டங்களில் மூன்றாண்டாக பொறுப்பு பதவி

தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளாக,
உடற்கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பி, விளையாட்டு பிரிவு மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்காக, புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். விளையாட்டு பிரிவுக்கு முதற்கட்டமாக, மாவட்டம்தோறும், உடற்கல்வி சிறப்பு பள்ளிகள் துவக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மாவட்ட வாரியாக, மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ள, உடற்கல்வி அதிகாரி பணியிடங்களை தாமதமின்றி நிரப்ப வேண்டும் என, உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அத்துடன், மாநில தலைமை பொறுப்பான, தலைமை உடற்கல்வி ஆய்வாளர் பதவியும், இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ளது. இவற்றை எல்லாம் நிரப்பாததால், அரசு பள்ளிகளில் விளையாட்டு போட்டிகளுக்கு, மாணவர்களை தயார் படுத்துவது தாமதமாவதாக, புகார்கள் எழுந்துள்ளன. தற்போதுள்ள நிலையில், உடற்கல்வி ஆசிரியர்கள் சிலருக்கு, பொறுப்பு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள், தாங்கள் ஏற்கனவே பணியாற்றும் பள்ளிகளின் பணிகளை முடித்து விட்டு, மாவட்ட பணிகளை கவனிக்க முடியாமல் திணறுகின்றனர்.ஆண்டுதோறும், தமிழக அரசின் சார்பில், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்படும், 100 கோடி ரூபாய் நிதி உதவியை, விளையாட்டு பிரிவின் முன்னேற்றத்துக்கு செலவிடுவதிலும், சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாநில, மாவட்ட அதிகாரி பணியிடங்களை நிரப்பி, அரசு பள்ளிகளின் விளையாட்டு பிரிவை சீர்படுத்த வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this

0 Comment to "உடற்கல்வி அதிகாரி பணியிடங்கள் காலி : மாவட்டங்களில் மூன்றாண்டாக பொறுப்பு பதவி"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...