சென்னை ஐகோர்ட்டில், வக்கீல்
எம்.புருஷோத்தமன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) பாடத்திட்ட விதிகளை மீறி தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், 1 முதல் 3-ம் வகுப்பு வரை 8 பாடங்களைப் போதிக்கின்றன. 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற விதிகளை மீறுகின்றனர்.
தனியார் நிறுவனங்கள் வெளியிடும் புத்தகங்களை வாங்கவேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே சி.பி.எஸ்.இ., பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், ‘சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் 2-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது. இதுதொடர்பான உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார். இதனடிப்படையில், மத்திய அரசும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், ‘2-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
அதை படித்து பார்த்த நீதிபதி, ‘இந்த உத்தரவை காகித வடிவில் வைத்திருக்காமல், தீவிரமாக அமல்படுத்த வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தார். மேலும், ‘மராட்டியம், தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் புத்தக சுமையை குறைப்பது தொடர்பான மாதிரி திட்டத்தை உருவாக்கியுள்ளதை போல, தமிழகத்தில் அதுபோன்ற திட்டத்தை ஏன் உருவாக்கக்கூடாது?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின்னர், ‘2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து, 3 வாரங்களுக்குள் தேசிய மற்றும் மாநில மொழி பத்திரிகைகளில் சி.பி.எஸ்.இ. விளம்பரம் செய்யவேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது மனுதாரர் புருஷோத்தமன், ‘சி.பி.எஸ்.இ. 2-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பொதுஅறிவு பாடத்தில் ரஜினிகாந்த், ஜாக்கிசான், அமீர்கான், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய், கத்ரீனா கைப் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள் இவர்களை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?. இதில் என்ன பொதுஅறிவு உள்ளது?’ என்று சி.பி.எஸ்.இ. மீது குற்றம் சுமத்தி வாதிட்டார்.
அதற்கு நீதிபதி என்.கிருபாகரன், நாட்டிலேயே முதன்மையான கல்வி வாரியமாக விளங்கும் சி.பி.எஸ்.இ.யின் தரம் என்ன ஆனது?’ என்று கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
அரசு மட்டுமே பள்ளிகளை நடத்தினால் இந்த பிரச்சினைகள் எழாது
ReplyDeleteஅரசு மட்டுமே பள்ளிகளை நடத்தினால் இந்த பிரச்சினைகள் எழாது
ReplyDelete