கேரளத்துக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் ஒப்புதல்

கேரள வெள்ள நிவாரணத்துக்கு
தங்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ள, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அணைகள் நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து வெள்ள பாதிப்பு அதிகரித்துள்ளது. வீடு, உடைமைகளை இழந்து உணவு, உடையின்றி மக்கள் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் சார்பாக நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கேரளத்தில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அம்மாநில மக்களுக்கு உதவும் வகையில், எங்களின் ஒரு நாள் ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்க முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பான ஒப்புதலை வழங்கி அரசின் தலைமைச் செயலாளரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this