அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே சுதந்திர தினத்தன்று அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு வேன் வசதி, உடைகள் உள்ளிட்ட 16 வகை பொருட்கள், மரக்கன்றுகளை வழங்கி கிராம மக்கள் அசத்தி உள்ளனர். அறந்தாங்கியை அடுத்த ஆ.குடிக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில், தனியார் பள்ளிகளின் வாகனங்கள் கிராமங்களுக்கு வருவதற்கு முன்பு அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 100 மாணவ, மாணவியர் படித்து வந்தனர். நாளடைவில் தனியார் பள்ளிகளின் வாகனங்கள் மாணவ, மாணவியரை வீட்டு வாசலுக்கே வந்து பள்ளிக்கு அழைத்து சென்று, கொண்டு வந்துவிட்டதால், ஆ.குடிக்காடு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளை தனியார் பள்ளிகளில் சேர்த்துவிட்டனர்.
இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை இந்த பள்ளியில் 9 மாணவ, மாணவியரே படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆ.குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ரமணராஜா என்பவர் பொறுப்பேற்றார். பின்னர் அவர் காசாவயல், தொண்டிக்கொல்லை, ஆ.குடிக்காடு, செட்டிக்காடு பகுதிகளுக்கு சென்று பெற்றோரை சந்தித்து வெளியூர்களுக்கு வாகனங்களில் செல்லும் மாணவ, மாணவியரை தங்கள் பள்ளியில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் பெற்றோர் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு நடந்து வருவதில் உள்ள சிரமங்களை தெரிவித்தனர். உடனே தலைமை ஆசிரியர் ரமணராஜா இதுகுறித்து ஆ.குடிக்காடு பகுதியைச் சேர்ந்த காசாவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் கருப்பையா என்பவரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து கருப்பையா அப்பகுதியைச் சேர்ந்த சந்திரன், வெங்கடேசன் மற்றும் பலரிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர்கள் கிராம மக்கள் ஒத்துழைப்புடன், ஆ.குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரை பள்ளிக்கு அழைத்துச் சென்று வீட்டில் கொண்டு வந்து விட ஒரு ஆம்னி வேன் வாங்கித் தருவதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்த பள்ளியில் கூடுதலாக 3 மாணவ, மாணவியர் சேர்ந்தனர். இந்நிலையில் ஆ.குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் பள்ளி மாணவ, மாணவியர் பள்ளிக்கு சென்று வர வேன் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் கணேசன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கத் தலைவர் கருப்பையா முன்னிலை வகித்து, வேன் சாவியை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு உடை, நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், தண்ணீர் பாட்டில், சீப்பு உள்ளிட்ட 16 வகையான பொருட்கள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஓய்வு விஏஓ விஸ்வநாதன், வேட்டனூர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...