செல்லிடப்பேசி செயலி மூலம் வாகன ஓட்டிகள் ஆவணங்களை காண்பித்தால் ஏற்க வேண்டும்: போலீஸாருக்கு டிஜிபி அறிவுறுத்தல்

வாகன ஓட்டிகள், வாகனத்துக்கான ஆவணங்களை
எண்ம பெட்டக முறை எனப்படும் டிஜிலாக்கர் (Digilocker) அல்லது எம்-பரிவாஹன் (mparivahan) செல்லிடப்பேசி செயலி மூலம் காண்பித்தால் போலீஸார் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தமிழக டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக காவல்துறை டிஜிபி தே.க.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
போக்குவரத்து போலீஸார் வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை கேட்கும்போது, எம்-பரிவாஹன் செயலி, டிஜிலாக்கர் ஆகியவற்றின் மூலம் அவற்றை காண்பித்தால், அதை ஏற்க மறுப்பதாக பொதுமக்களிடமிருந்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு புகார்கள் சென்றுள்ளன. இது தவறான நடவடிக்கை. மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறையின் மூலமே டிஜிலாக்கர், எம்-பரிவாஹன் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொதுமக்கள் வாகன ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை எண்ம வடிவில் வைத்துக் கொள்ளலாம்.
டிஜிலாக்கரிலும், எம்-பரிவாஹன் செல்லிடப்பேசி செயலிலும் உள்ள இந்த ஆவணங்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி அசல் ஆவணங்களுக்கு இணையானவை. மேலும் இவற்றில் வாகனத்துக்குரிய காப்பீடு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உடனுக்குடன் சேர்க்கப்படுகின்றன. எனவே வாகன ஓட்டிகள் போலீஸார் கேட்கும்போது டிஜிலாக்கர், எம்-பரிவாஹன் மூலமாகவும் ஆவணங்களை காட்டினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதேவேளையில் வாகன ஓட்டிகள் சட்டவிதிமுறைகளை மீறும்போது, இத்தகைய தொழில்நுட்ப வசதி மூலம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எளிது. மேலும் இவ்வாறு ஆவணங்களை வாகன ஓட்டிகள் காண்பிக்கும்போது, அதன் உண்மை தன்மையையும் போலீஸார் எளிதில் இணையதளம் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this