பிராந்திய மொழிகளில் இணையதளங்களுக்கு பெயரிடும் வசதி, விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
டி.என்.எஸ்., எனப்படும், உலகளாவிய, இணையதள பெயர் சூட்டும் நடைமுறையை, ஐ.சி.ஏ.என்.என்., எனப்படும், பெயரிடல் மற்றும் எண்களுக்கான இணையதள கழகம் என்ற நிறுவனம் பொறுப்பேற்று செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம், இந்தியாவில் உள்ள, தமிழ் உள்ளிட்ட, 22 மொழிகளில் இணையதள பெயர் சூட்டும் நடைமுறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, பெங்காலி, தேவநாகரி, குஜராத்தி, குர்முகி ஆகிய ஒன்பது, இந்திய மொழிகளில், இணையதளங்களுக்கு பெயரிடும் பணிகள் நடக்கின்றன. இதை, ஐ.சி.ஏ.என்.என்., நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர், சமிரான் குப்தா தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், தமிழ் தொடர்பான இணையதளங்களின் பெயர்களை, தமிழிலேயே தட்டச்சு செய்து, பெற முடியும். தற்போதைய நடைமுறையில், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து, சம்பந்தப்பட்ட இணையதள முகவரியை பெறும் வசதி மட்டுமே உள்ளது.
உலக மக்கள் தொகையில், 52 சதவீதம் பேர், இணையதளம் பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள, ஆங்கிலம் தெரியாத, 48 சதவீத மக்கள், அவர்களின் சொந்த மொழிகளில் தட்டச்சு செய்து இணையதளத்தை பெறுவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், சமிரான் குப்தா கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...