பல்கலையில் தேங்கும் பைல்கள் மாணவர்கள் தவிப்பு

மதுரை, மதுரை காமராஜ் பல்கலையில் கன்வீனர் கமிட்டி கூடுவதில் இழுபறி நீடிப்பதால் நுாற்றுக்கணக்கான பைல்கள் தேங்குவதாக புகார் எழுந்துள்ளது.
இப்பல்கலை துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டபின், பல்கலை நிர்வாகத்தை நடத்த சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம் தலைமையில் உறுப்பினர்கள் சந்தோஷ்குமார், ராமகிருஷ்ணன் கொண்ட கமிட்டியை உயர்கல்வித்துறை நியமித்தது.துணைவேந்தர் இல்லாத நிலையில் இக்கமிட்டியின் 3 பேருமே பைலில் கையெழுத்திட வேண்டும். ஆனால் பூவலிங்கம், சந்தோஷ்குமார் சென்னையில் பெரும்பாலும் இருப்பதால் மூவரின் கையெழுத்தும் ஒருசேர கிடைப்பதில்லை. இதனால் ஏராளமான பைல்கள் தேங்கிக் கிடக்கின்றன. துறைகள், புலங்கள் வாரியாக மாணவர் சார்ந்த திட்டங்கள், முடிவுகள் மேற்கொள்ள முடியாமல் சிக்கல்கள் ஏற்படுகின்றன.பேராசிரியர்கள் கூறியதாவது:கன்வீனர் குழு அமைக்கப்பட்டாலும் அது இல்லாதது போன்ற நிலை தான் உள்ளது. கமிட்டி கூடாததால் மூவரின் கையெழுத்துக்களும் பைலில் பெறுவது அரிதாக உள்ளது. குறிப்பாக, எம்.பில்., பி.எச்.டி., படிப்பிற்கான நுழைவு தேர்வு சமீபத்தில் நடந்தது. இதில் பலர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வழிகாட்டிகள் (கைடு) இல்லை. துணைவேந்தர் இருந்திருந்தால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும். ஆனால் கமிட்டி இதுகுறித்து அக்கறை காட்டவில்லை. இதுபோல் ஒவ்வொரு துறைகளிலும் ஏராளமான பைல்கள் தேங்கிக்கிடக்கின்றன, என்றனர்.

Share this

0 Comment to " பல்கலையில் தேங்கும் பைல்கள் மாணவர்கள் தவிப்பு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...