அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு: 6, 7, 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் முறை

 `படிப்படியாக 6, 7  மற்றும் 8ம்வகுப்பு ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறைஅமல்படுத்தப்படும்’  என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். ஈரோட்டில்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு  பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் டிசம்பர் மாத இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக  சென்னை, திருவள்ளூர், கோவை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில்  300 பள்ளிகளில்  இணையதள வசதியுடன் கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்தப்படும். இந்த திட்டம்  அனைத்து பகுதிகளுக்கும் விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வணிகவியல் மாணவர்களை சிறந்த பட்டய  கணக்காளர்களாக உருவாக்க 300  பட்டய கணக்காளர்களை கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலமாக  25 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.


சிறப்பு ஆசிரியர் தேர்வில் எவ்வித  முறைகேடும் நடைபெறவில்லை. சான்றிதழ்களில் சில குளறுபடி உள்ளது தெரிய  வந்துள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சான்றிதழ்  குளறுபடி குற்றச்சாட்டுகளில்  உள்ளானவர்கள் சார்பதிவாளர்கள் அல்லது  கோட்டாட்சியர்களிடம் சான்றொப்பம் பெற்று ஒப்படைக்க வேண்டும்.  சிறப்பாசிரியர் தேர்வில் தவறு நடந்துள்ளது என யாராவது குற்றச்சாட்டு  சுமத்தினால் அதுதொடர்பாக உரிய  விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்னையில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ஒருவர் வேண்டுமென்றே பொய்யான  குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை  எடுக்கப்படும்.  பயோமெட்ரிக் முறை தற்போது 9ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை  உள்ள ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக 6, 7  மற்றும் 8ம்வகுப்பு ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறை  அமல்படுத்தப்படும்.  இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்

Share this