Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அழகான உடலுக்கு அருமையான ஓய்வு கொடுங்கள்!





உடல் இயக்கத்திற்கு பல்வேறு உறுப்புகள் பல்வேறு பணிகளைப் புரிந்து வருகினறன. எல்லா உறுப்புக்களுக்கும் அளவான வேலையே கொடுக்க வேண்டும். 



இப்படியின்றி அளவுக்கு மீறி ஓய்வின்றி வேலை கொடுத்தால் அவ்வுறுப்புகள் விரைவில் பழுதடைந்து பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். எனவே ஓய்வு என்பது இரவில் அதிக நேரம் கண் விழித்தலைத் தவிர்த்தல், படுக்கப் போவதற்கு முன்பு சிறிது தூரம் நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளுவது நலம் பயக்கும்.
அதுபோன்றே இரவு உணவை அளவோடு உண்பதோடு, பால் பழம், முக்கியமாக இரண்டு டம்ளர் தூய்மையான நீரைக் கொண்டு வாய் கொப்பளித்து, சுத்தம் செய்து பின்பு நீர் அருந்துவதை வழக்கமாகக் கொண்டால், உண்ட உணவு ஜீரணம் அடைவதோடு, இரவில் நல்ல நித்திரையையும் அளிக்கும் தினந்தோறும் பற்களைச் சுத்தம் செய்வதுபோல், நாக்கினையும் சுத்தம் செய்ய வேண்டும்.



இதனால் உணவின் ருசியை அறிந்து சாப்பிட முடியும். ஆரோக்கியத்திற்கு நாக்கு சுத்தமாக இருக்கவேண்டியது முக்கியம் என்பதால்தான், உடல் நோயுற்றபோது, மருத்துவர்கள் நாக்கை காட்டச்சொல்வதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா? அதுபோன்று தான் சித்த வைத்திய முறையிலும் நாடி பார்த்து வியாதி அறியும் முறை பண்டைய காலம் தொட்டு வழக்கமாக இருக்கிறது. இதயத்திலிருந்து ஏற்படும் ரத்த ஓட்டம் ஏற்படுத்தும் அலைகளையே நாடிகள் என்று கூறுகின்றனர். தினந்தோறும் காலையிலும் இரவு படுக்கப் போவதற்கு முன்பும் பற்களைச் சுத்தம் செய்யும்போது, கைவிரலினால் ஈறுகளையும் இரண்டு மூன்று நிமிடங்கள் அழுத்தி தேய்ப்பதின் மூலம் பற்கள் பலமடையும். நீண்ட வயதானாலும் பற்சிதைவு, பல் சொத்தை தடுக்கப்படும்.



அன்றாடம் பற்களை சுத்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நாம், கண்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. பற்களைப் போன்றே கண்கள் பாதுகாப்பும் மிகவும் அவசியமாகும். கண்களையும் ஒரு நாளைக்கு இரண்டு வேளை, சுத்தமான நீரை கையிலேந்தி கண்களைத் திறந்துகொண்டு பத்து பதினைந்து முறை நீரினால் கண்களில் அடித்து கழுவ வேண்டும். இதனால் கண்ணில் உண்டாகும். அசுத்தம் அவ்வப்போது நீங்கிவிடும். நீண்ட காலத்திற்கு கண் ஒளி மங்காமல் பாதுகாக்க முடியும்.

சர்க்கரை நோயுள்ளவர்கள் முறையாக உணவு சாப்பிடாமல் மாத்திரை சாப்பிட்டு விட்டலோ, அளவுக்கு மீறி மாத்திரை உட்கொண்டு விட்டாலோ ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பு அளவை விடக் குறைந்துவிடும். அப்போது கிறுகிறுப்பும், மயக்கம், உடல் வியர்ப்பது போன்ற தொல்லைகள் மற்றும் அறிகுறிகள் தோன்றும். இதை உடனடியாகச் சரி செய்ய சீனி, குளுகோஸ், இனிப்பு பானங்கள் இவற்றில் ஒன்றை உபயோகித்தால் நிலமை சீராகும், மயக்கம் தெளிவாகும். சரி, சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய அன்றாட உணவுப் பட்டியலைப் பார்ப்போமா?

காலை உணவு (6.00 மணி) சர்க்கரை இல்லாத சோயா பால், 8.00 மணி இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் அல்லது ரொட்டி சாம்பார், நல்லெண்ணெய் மிளகாய்ப் பொடி – சட்னி காலை 11.00 மணி மோர் அல்லது சர்க்கரை இல்லாத சோயா பால்-எலுமிச்சை (தேசிக்காய்) ரசம் – மதிய உணவு அரிசி அல்லது கோதுமைச் சோறு அல்லது நெய் இல்லாத சப்பாத்தி – கீரை மற்றும் பச்சைக் காய்கறிகள் வேக வைத்தவை – சாலட் – சுட்ட அப்பளம் – சாம்பார் ரசம், மோர், ஊறுகாய்.



மாலைச் சிற்றுண்டியாக சோயா பால் தேநீர் – ஏதாவது பிஸ்கட், சுண்டல், ரொட்டி, அதுபோன்றே இரவு உணவும் எளிதாக தெரிவிக்கக்கூடிய அளவில் இட்லி, கோதுமை (சம்பா) ரவை உப்புமா அல்லது சப்பாத்தி – தோசை போன்றவை சிறந்தது. அதன் பின் ஒரு 15-30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளுவது இரவு சுகமான நித்திரையை அளிக்கும்.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் : வெல்லம், சர்க்கரை, சீனி, தேன், ஜாம், இனிப்புப் பண்டங்கள், வெண்ணெய், நெய், கோலா ஐஸ்கிரீம், முந்திரி பருப்பு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பேரீச்சம் பழம், கொழுப்பு மிகுந்த உணவு வகைகள், இறைச்சி ஆகியவை தவிர்க்கப்பட வேண்டியவை என ஆங்கில மருத்துவக் குறிப்பு கூறினாலும் இயற்கை மூலிகை சிகிச்சையில் இந்த வித கட்டுப்பாடு ஏதும் இன்றி முறையே மருத்துவ ஆலோசனையின் படி உணவுகளை அமைத்துக்கொள்ள வழி வகைகள் உள்ளன.



பச்சரிசி, நிலக்கடலை, தேங்காய், சேப்பங்கிழங்கு, உருளைக் கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, வாழைக்காய், தேங்காய் மது போன்ற இதர பான வகைகள் தவிர்ப்பது சிறந்ததாகும். காய்கறிகளை பொறுத்த வரை முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பீன்ஸ், வெண்டை, காராமணி, முருங்கைக்காய், புடலங்காய், வெங்காயம், பாகற்காய், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், தக்காளி, கீரைத்தண்டு, காளான், குட மிளகாய், பச்சை மிளகாய் அனைத்து கீரை வகைகள், புழுங்கல் அரிசி, கோதுமை மற்றும் கேழ்வரகு ஆகியவற்றின் உணவு வகைகள், சர்க்கரை நோயாளிகள் சேர்த்துக் கொள்ளலாம்.

சமையல் உப்பு என்பது சோடியம் குளோரைடு என்ற அயனிகளால் ஆனது. இதில் சோடியம் அயனிக்கு உடலில் நீரைத் தேக்கி வைக்கும் தன்மை உண்டு. நம் சிறுநீரகங்களுக்கு சிறுநீரைச் சுரக்கும் பணியைத் தவிர, உடலில் திரவ நிலையைச் சமச்சீராக வைத்துக்கொள்ள வேண்டிய பணியும் உண்டு. உணவில் அதிகமாக உப்பைச் சேர்த்தால் அதிலுள்ள சோடியம் உடலில் தண்ணீரைத் தேங்கச் செய்து சிறுநீரகங்களுக்கு அதிக வேலைப் பளுவைக் கொடுத்துவிடும். அதிலும் ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்குச் சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தத்தால் சிறுநீரகம் சிறிதளவு பாதிக்கப்பட்டிருக்கலாம்.



இந்த சமயத்தில் அவர்கள் உப்பை அதிகம் சேர்த்துக்கொண்டால் சீக்கிரமே சிறுநீரகம் பழுதடைந்ததுவிடும். இந்த நிலைமையைத் தவிர்க்கத்தான் மருத்துவர்கள் ரத்தக் கொதிப்பு உள்ளவர்களை உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்கள். அதுபோலவே சர்க்கரையை அதிகமாகச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பது உண்மையல்ல. சர்க்கரை நோயாளிகள் அதிக அளவில் சாக்கரையைச் சேர்த்துக் கொண்டால் அவர்களுக்கு சர்க்கரை நோய் அதிகரித்துவிடும் என்று வேண்டுமானால் சொல்லலாம். நம் உடலில் இன்சுலின் என்ற இயக்குநீர் சுரப்பது குறையும்போதுதான் சர்க்கரை நோய் வருகிறது. மற்றபடி சர்க்கரையை அதிகம் சாப்பிடுவதற்கும் சர்க்கரை நோய் வருவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. வாழ்வது ஒருமுறைதான் என்றபடி, வாழும் வரை நாம் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுடனும், அடிக்கடி மருத்துவரை கலந்து ஆலோசனைகளைப் பெற்று, இயற்கை உணவு வகைகளை உண்டு வந்தால் பிணிகளை தவிர்க்க முடியும்.

தூக்கம்

உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஓய்வு எனும் நித்திரை மிகவும் தேவையானதாகும். அப்போதுதான் உடல் ஆரோக்கியம் பாதுகாக்க முடியும் என்பதோடு, உடலில் சுறுசுறுப்பும் தெம்பும், மனோபலமும் ஏற்பட்டு, அலுப்போ அல்லது களைப்போ இன்றி, நமது அன்றாட அலுவல்களை கவனிக்க முடியும், மற்றும் உடல் ஆரோக்கியமும் பேண முடியும்.

நல்ல சாப்பாடு, நண்பர்களுடன் நல்ல பொழுது போக்கு, குடும்பத்தில் குதூகலம், பொருளாதார திருப்தி இப்படி ஒரு திட்டமிட்ட வாழ்க்கை அமைந்திருந்தும், இரவில் தூக்கம் வரவில்லை என்றால் என்ன ஆகும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இத்தகைய வாழ்க்கை நிம்மதியற்ற நிலைமைக்கும் உடல் ஆரோக்கிய பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.



பொதுவாக உடல் நோயுற்று, சிரமப்பட்டுக்கொண்டு இருக்கும்போது, தூக்கம் இல்லாமல் இருப்பதைக்கூட, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு சமாளிக்க முடியும். அதற்காக எப்போதெல்லாம் நித்திரை வரவில்லை என்றாலும் தூக்க மாத்திரைகளை பாவித்தால் மிகவும் ஆபத்தானதோடு மட்டுமின்றி, அதன் தாக்கத்தால் வேறு சில உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு கூடுதலாக இருக்கிறது. சில சமயங்களில் நோயுற்ற காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளாம் தூக்கம் வராமல் போவதும் இயல்பானதாகும். இது ஒரு சாதாரண சூழ்நிலையாகும். மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டால் தூக்கம் வரும். ஆனால் இப்படி எந்த வித காரணங்கள் இன்றி தூக்கம் வரவில்லை என்றால், அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமாகும். தூக்கம் வராததற்கு பத்து காரணங்கள் உள்ளன என்று பொதுவாகச் சொல்வார்கள். அவற்றின் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை இனி பார்ப்போம்.

தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் என்பது நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். ஒரு மனிதனுக்கு தினமும் எத்தனை கலோரிச் சத்து உணவு தேவைப்படும் என்பதற்கு இது ஒப்பான கருத்தாகும். இதற்கு சரியாக பதில் கூறுவது என்பது கடினம். அதுபோலதான் தூக்கமும், தூக்கம் என்பது ஆளாளுக்கு மாறுபடும். ஒரு நாளில் எட்டு அல்லது குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் தூக்கம் ஒவ்வொருவருக்கும் மிக அவசியமாகும். இந்த நேரம் குறைந்தால் இதய நோய் அல்லது கேன்சர் எனும் புற்று நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அமெரிக்க ஆராயச்சி கூறுகிறது. அதுபோன்றே நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கும் இத்தகைய ஆபத்துகள் விளைய வாய்ப்பு இருக்கின்றது.



தூக்கத்தால் அவதிப்படுபவர்கள் ஒரு வாரம் வரை தூங்கும் நேரத்தை குறிப்பெடுத்துக் கொண்டு அனுமானிப்பததோடு தூங்கும் மற்றும் எழுந்திருக்கும் கால அளவையும் அவதானிப்பதன் மூலமும், தூக்க மாத்திரையின்றி தூக்கம் வருகிறதா போன்றவற்றை கவனித்து வருவதும் ஒரு விதத்தில், அதன் பின்னனியை அறிந்து கொள்ள முடியும். ஒரு சிலரின் இமைகள் மூடியபடி இருக்கும். ஆனால் தூக்கம் வராது. அதே சமயம் ஒரு சிலர் கடுமையான வேலைகளுக்கு இடையில் அன்றாடம் அடிக்கடி குட்டித் தூக்கம் மேற்கொள்ளுவார்கள். இருப்பினும் நாள் பட்ட தூக்கமின்மையால் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வயதானவர்களாக இருந்தால் டயாபடிஸ் உண்டாகும் வாய்ப்பும் அதிகம்.

தூக்கமின்மை இருந்தால், இரவு 8.00 மணிக்குள் இரவு உணவை அதிக அளவு உட்கொள்ளாமல் உட்கொண்டம பிறகு கொஞ்ச தூரம் நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றில் ஈடுபட்டு, ஒரு டம்ளர் பால், ஏதாவது ஒரு பழத்தை உண்டு விட்டு, கொஞ்சம் ஓய்வு எடுத்து, சீக்கிரமே படுக்கப் போவது சிறந்ததாகும். பொதுவாகவே தூக்கம் வரவில்லையே என்பதற்காக ஒரு சிலர் தீய பழக்கங்களான, மது அருந்துதல், புகைப் பிடித்தல் போன்றவற்றை மேற்கொள்வதும் உடல் நலத்திற்கு கெடுதல் என்பதோடு, நாளடைவில், இவற்றை பிரயோகித்தால் தான் தூக்கம் வரும் என்ற மன நிலைக்கு கொண்டு செல்லுதல், இவ்வாறாக மது, காபி, மன அழுத்தம், மனச்சோர்வு, டென்சன், உள்ளிட்டவையும் தூக்கமின்மைக்கும் காரணமாய் அமைகின்றது.




ஒரு சிலர் தூங்க முற்படும்போது, புத்தகம் படிக்கும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அது தவறில்லை. ஆனால் அதிக நேரம், குறைவான வெளிச்சத்தில் படிப்பதுமே கண்களை பாதிப்பதோடு, நிம்மதியான தூக்கத்தை தராது. இரவு படுக்க போவதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மிகவும் சிறந்ததாகும். எது எப்படி இருப்பினும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் தங்கள் உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஓய்வு தர வேண்டும் என்பது இயற்கையின் நியதி. அது தான் களைப்பாகவோ, சோர்வாகவோ அல்லது எதிலும் ஒரு சுறுசுறுப்போ, ஆர்வமோ இல்லாதபடி செய்து, உடல் நலத்தையும் பாதிப்படைய வைக்கின்றது. கண் விழித்தல் என்பதும் இந்துக்களுக்கு மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் கடைபிடிப்பது வழக்கமாகும்.


அது கூட இரவு கண் விழித்து விட்டு மறுநாள் பகலில் தூங்கக்கூடாது என்றும், அதுபோல் எண்ணெய் ஸ்நானம் எடுத்துக் கொண்டால் பகலில் தூங்ககூடாது என்றும் கடைபிடிக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. எனவே தூக்கம் வராததிற்கு பல வித காரணங்கள் இருப்பதால், மருத்துவரை கலந்து, அதற்கான சிகிச்சை பெறுவது தான் சிறந்தது. அவ்வாறின்றி கண்ட தூக்க மாத்திரைகளையோ, தீய பழக்க வழக்கங்களை மேற்கொள்வதோ ஆபத்தானதாகும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive