குழந்தைகள் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கு பாடம் நடத்திய மாணவர்கள்!

கூடலூரை அடுத்துள்ள தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில், அனைவரையும் கவரும் விதமாக புதுமையான முறையில் குழந்தைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்திலுள்ள தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் தலைமை வகித்தார்.
பழங்குடியின மாணவர்களுக்கு தலைமைப் பண்பை வளர்க்கும் முகமாக, 8-ஆம் வகுப்பு மாணவர் பரத் ஒரு நாள் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார். தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்து பணிகளை மேற்கொண்டார். தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இதர ஆசிரியர்கள், பணியாளர்கள் அவர் முன்பு வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.
தொடர்ந்து, ஆசிரியர்களை வகுப்பறையில் அமரவைத்து மாணவர்கள் பாடம் நடத்தினர். மாணவர்களின் இருக்கைகளில் அமர்ந்து ஆசிரியர்கள் பாடங்களைக் கவனித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்க இதுபோன்ற ஏற்பாடுகளைச் செய்ததாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
ஆசிரியர்களை மாணவர்களின் இருக்கையில் அமரவைத்து பாடம் நடத்தும் மாணவி அஜிதா.

Share this