என் இளமைக் காலத்தில் சென்னையில் சாதாரண
வீட்டில்தான் வளர்ந்தேன், தரையில்தான் படுத்துத் தூங்கினேன் என்று கூகுள்
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இந்தியரும் தமிழகத்தைச்
சேர்ந்தவரான சுந்தர் பிச்சை உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை,
சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பள்ளிப்படிப்பை முடித்த சுந்தர் பிச்சை
காரக்பூர் ஐஐடியில் பட்டப்படிப்பையும், அதன்பின் அமெரிக்காவின்
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலும் முதுநிலைப் பட்டம் பயின்றார். அதன்பின்
பென்சில்வேனியா வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ. பட்டத்தையும் சுந்தர் பிச்சை
பெற்றார். கடந்த 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த
சுந்தர் பிச்சை படிப்படியாக உயர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் 2015-ம் ஆண்டில்
கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தி நியூயார்க் டைம்ஸ்
நாளேட்டுக்குக் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை நேற்று பேட்டி
அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் தனது இளமைக்காலத்தில் சென்னை வாழ்க்கையை
உருக்கமாதத் தெரிவித்துள்ளார்.
அதில் சுந்தர் பிச்சை கூறியிருப்பதாவது:
''இன்று நான் மிகப்பெரிய நிறுவனத்தின்
சிஇஓவாக இருக்கிறேன். ஆனால் எனக்குள்ளும் எளிமையான வாழ்க்கை இருந்தது.
இன்றைய வாழ்க்கை முறையோடு, உலகோடு ஒப்பிடும்போது, அந்த வாழ்க்கை மிகவும்
அழகானது. சென்னையில் மிகவும் சாதாரண சிறிய வாடகை வீட்டில் என் என்
பெற்றோருடன் வாழ்ந்தேன். வீடு மிகவும் சிறியதாக இருந்ததால் அனைவரும்
தரையில்தான் படுத்து உறங்குவோம். நான் சென்னையில் வாழ்ந்த காலத்தில்
திடீரென பஞ்சம் ஏற்பட்டது, அதை நினைத்து நாங்கள் கவலைப்பட்டோம், பயந்தோம்.
அந்தப் பஞ்சத்தின் அச்சம் காரணமாகவே இன்றுகூட நான் தூங்கும்போது, ஒரு
பாட்டில் தண்ணீர் இல்லாமல் தூங்கியதில்லை. என்னுடைய வீட்டில் ஃபிரிட்ஜ் கூட
கிடையாது. ஆனால், மற்ற வீடுகளில் இருந்து. நீண்டகாலத்துக்குப் பின்புதான்
நாங்கள் ஃபிரிட்ஜ் வாங்கினோம்.
அது மிகப்பெரிய கதை.
சிறுவயதில் எனக்குப் படிக்க அதிகமான நேரம்
இருந்தது. அதனால், கையில் கிடைத்த புத்தகங்களைப் படித்தேன். சார்லஸ்
டிக்கென்ஸ் புத்தகங்களை அதிகமாகப் படித்தேன். நண்பர்களுடன் செலவிடுவது,
சென்னையில் தெருவில் கிரிக்கெட் விளையாடுவது, புத்தகங்கள் படிப்பது
ஆகியவைதான் என்னுடைய இளமைக் கால வாழ்க்கை.
நான் படிக்கும் காலத்தில்
கம்ப்யூட்டரையும், கம்ப்யூட்டர் லேப்பையும் பார்த்த அனுபவம் இன்று
சுவாரஸ்யமானது. அப்போதெல்லாம் கம்ப்யூட்டரை இயக்குவது என்பது பெரிய விஷயம்.
நான் படிக்கும் காலத்தில் ஏறக்குறைய நான் 4 முறை கம்ப்யூட்டரை இயக்கி
இருப்பேன்''.
இவ்வாறு சுந்தர் பிச்சை தெரிவித்தார்.
சமீபத்தில் கூகுள் நிறுவனத்தில்
பணியாற்றும் பணியாளர்கள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப்
போராட்டம் நடத்தியது குறித்து சுந்தர் பிச்சையிடம் கேட்கப்பட்டது. அதற்கு
அவர் பதில் அளிக்கையில், ''உலகம் முழுவதிலும் உள்ள கூகுள் நிறுவனத்தின்
பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இன்னும் நாங்கள் மேம்பட்ட
நிர்வாகத்தை அளிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களின்
உணர்வுகளைப் புரிந்துகொண்டோம், சில தவறுகள் இருப்பதையும் உணர்தோம்.
தவறுகளைச் சரிசெய்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் வகுத்து வருகிறோம்'' என
சுந்தர் பிச்சை தெரிவித்தார்.
Inspiration
ReplyDelete