NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு: இந்த ஆண்டே செயல்படுத்த முடியாது - மத்திய அரசு

supremecourt

மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு முறையை நடப்பாண்டில் செயல்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீதம் அல்லது 27 சதவீதம் என எதையும் இந்த ஆண்டு வழங்க முடியாது என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கக் கோரும் விவகாரத்தில், இந்த ஆண்டு இடஒதுக்கீடு அளிக்க முடியுமா என பதிலளிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், மத்திய அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நடப்பாண்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் வி.கிரி, வழக்குரைஞர் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜராகி, "நிகழ் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்பில் இருந்து 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிட வேண்டும். மாநிலத்தில் கடைப்பிடிக்கப்படும் இடஒதுக்கீடு முறைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்து அமைந்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு இடஒதுக்கீடு வழங்காமல், இதற்காக ஒரு குழுவை அமைத்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது சரியல்ல. மேலும், மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் அளித்துள்ள ஆவணத்தின்படி, மாநிலத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறைக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பது தெளிவாகத் தெரிய வருகிறது. ஆகவே, இந்த ஆண்டே இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்' என்றனர்.


மருத்துவர் டி.ஜி.பாபு சார்பில் மாநிலங்களவை திமுக உறுப்பினரும் மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன் வாதிடுகையில், "சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகம் ஒரு குழுவை அமைத்திருந்தது. அந்தக் குழுவின் கூட்டம் செப்டம்பர் 22-ஆம் தேதி கூடியது. நாடாளுமன்றத்தில் திமுக எம்பி எழுப்பிய கேள்வியின் போது, மத்திய சுகாதார அமைச்சர், "அகில இந்திய தொகுப்புக்கு மாநில அரசு ஒதுக்கிய இடங்களில் மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீடு பின்பற்றப்படும்' என்றார். 


ஆகவே, இந்தக் கல்வி ஆண்டிலேயே அந்த இடஒதுக்கீட்டை மாநிலத்திற்கு அளிக்க வேண்டும். "நீட்' தேர்வு முடிவுகளை மத்திய அரசு அக்டோபர் 16-இல் அறிவிக்க உள்ளது. எனவே, வழக்கில் தொடர்புடையவர்களின் உரிமைகளுக்கு பாதகம் இல்லாத வகையில், மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் மத்திய அரசு அமல்படுத்தி வரும் 27 சதவீத இடஒதுக்கீட்டையாவது மத்திய தொகுப்புக்கு மாநில அரசு ஒப்படைத்த இடங்களில் மத்திய அரசு கொடுக்கலாம். உயர்நீதின்றம் அமைத்த குழுவின் முடிவு வரும் வரை இது தற்காலிக ஏற்பாடாக இருக்கும்' என்றார்.


மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பல்பீர் சிங், "உயர்நீதிமன்றம் அமைத்திருந்த குழுவின் கூட்டம் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக அரசு அதன் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மத்திய அரசு நிறுவனங்களில் 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதை அகில இந்தியத் தொகுப்பு இடங்களுக்கு வழங்க முடியும். மாநிலத்திற்கு மாநிலம் இடஒதுக்கீடு பின்பற்றப்படும் முறை மாறுபடுவதால் இதை அமல்படுத்துவது மத்திய அரசுக்கு சிரமமாக இருக்கும். உதாரணமாக, 50 சதவீத இடஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தடையாக உள்ளது. 


அதேவேளையில், தமிழகத்தில் 1993-ஆம் ஆண்டுச் சட்டப்படி 69 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. ஆகவே, இதுகுறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்' என்றார். 


தேசிய மருத்துவக் கவுன்சில் சார்பில் ஆஜரான சர்மா, "இளங்கலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நடைமுறைகள் இன்னும் தொடங்கவில்லை' என்றார். அதிமுக சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீநிவாசன்,"இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. இதனால், மத்திய அரசு இந்த வாதங்களை வலியுறுத்த முடியாது' என்றார். 


இதையடுத்து, நீதிபதிகள் அமர்வு, மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் இன்னும் தொடங்கவில்லை என்பதால், இந்த ஆண்டு இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியுமா என்பது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்களைப் பெற்று தெரிவிக்குமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பல்பீர் சிங், சர்மா ஆகியோரிடம் வாய்மொழியாக கேட்டுக் கொள்ளப்பட்டது. 






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive