++ பள்ளிகள் திறப்பு: மத்திய அரசின் அனுமதிக்குப் பிறகும் பல்வேறு மாநிலங்கள் தயக்கம் ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
590036

பள்ளிகளைத் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்த பிறகும், கரோனா  பரவலின் தீவிரத்தால் பல்வேறு மாநிலங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.

ஊரடங்கில் ஒவ்வொரு மாதமும் தளர்வுகளை அறிவித்துவரும் மத்திய அரசு, அக்.15-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று செப்.30-ம் தேதி தெரிவித்தது. கல்வி நிறுவனங்களில் உரிய கரோனா  வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் டெல்லி, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் பள்ளிகளைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதற்கிடையில் ஹரியாணா, மேகாலயா ஆகிய மாநிலங்கள் பள்ளிகளைத் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

''அக்டோபர் 31-ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது; ஏற்கெனவே இருந்ததுபோல ஆன்லைன் வழியில் வகுப்புகள் தொடரும்'' என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.


கர்நாடக அரசின் சார்பில் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கூறும்போது, ''பள்ளிகளை மீண்டும் திறப்பதில் எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. அனைத்துக் கோணங்களிலும் அலசி ஆராய்ந்த பிறகு, இதுகுறித்து முடிவெடுக்கப்படும்'' என்றார்.

சத்தீஸ்கர் அரசு, ''பெருந்தொற்றுக் காலத்தில் மீண்டும் உத்தரவுகள் வரும் வரை மாநிலம் முழுவதும், பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்'' என்று தெரிவித்துள்ளது.

அதேபோல மகாராஷ்டிர அரசு, ''தீபாவளிக்குப் பிறகு கோவிட்-19 சூழல் குறித்து மதிப்பிடப்படும். அதுவரை பள்ளிகள் திறக்கப்படாது'' என்று தெரிவித்துள்ளது.

குஜராத்தில் தீபாவளிக்குப் பிறகு பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேகாலயாவில் பள்ளிகள் திறப்பு  குறித்துப் பெற்றோர்களிடம் கருத்துகளைப் பெற்ற பிறகே, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் 6 முதல் 9-ம் வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து யோசித்து வருவதாகவும் இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேச அரசு, நவம்பர் 2-ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ’’நவம்பர் மாதத்தின் இறுதியில் பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவெடுப்போம்’’ என்று அறிவித்துள்ளார்.

எனினும் உத்தரப் பிரதேச அரசு, கட்டுப்பாட்டு மையங்களுக்கு வெளியே உள்ள 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள், அக்.19 முதல் பள்ளிகளுக்கு வரலாம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் அக்.8 முதல் அரை நாள் வகுப்புகள் நடந்து வருகின்றன.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 லட்சத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...