++ ஆசிரியர் நியமனத்திற்கு வயது வரம்பு-அநீதி : உடனடியாக நீக்க வேண்டும்! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official


தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், அதன்படி   40 வயதை கடந்தவர்களுக்கு இனி ஆசிரியர் பணி வழங்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளதுலட்சக்கணக்கானவர்களின் ஆசிரியர் பணி கனவை கலைக்கும் இந்த அறிவிப்பு மிகவும் அநீதியானது.

தமிழக அரசின் இந்த ஆணையை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் வயது வரம்பு நிர்ணயிக்கப்படாத ஒரே பணி ஆசிரியர் பணி மட்டும் தான். ஒருவர் ஓராண்டு பணி நிறைவு செய்யும் தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பது தான் கடந்த 30 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரே நிபந்தனை ஆகும். அதன்படி ஆசிரியர் பணிக்கு தகுதிபெற்ற ஒருவர் அவரது 57-ஆவது வயதில் கூட பணியில் சேர முடியும். தமிழ்நாட்டில் ஓய்வு பெறும் வயது 59-ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது 58-ஆக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். மாறாக 40-ஆக குறைக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.

 தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கு தேவையான குறைந்தபட்சக் கல்வி பெற்றவர்கள் 7.12 லட்சம் பேர் ஆவர். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி இடைநிலை ஆசிரியர் பணிக்கு 1,66,543 பேர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 3,14,152 பேர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2,31,501 பேர் என மொத்தம் 7,12,196 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் தவிர  இன்னும் சில லட்சம் பேர் பதிவு செய்வதற்காக காத்திருக்கின்றனர். இவர்களில் சில லட்சம் பேர் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். இவர்களில்  40 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் 40 வயதைக் கடந்தவர்கள். இட ஒதுக்கீட்டு வகுப்பினருக்கு  வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்பட்டிருந்தாலும் கூட, அதையும் கடந்து ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ள லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவர். அதற்கு அரசு காரணமாக இருக்கக் கூடாது.

 மத்திய அரசின் சார்பிலும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் சார்பிலும் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்பதற்கு வயது வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஒருவர் 55 வயதிலும் கூட ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்; ஆனால், அதில் அவர் தேர்ச்சி பெற்றாலும் கூட ஆசிரியர் ஆக முடியாது என்பது முரண்பாடுகளின் உச்சம் அல்லவா? தமிழ்நாட்டில் 2013&ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் சுமார் 80,000 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெறாத நிலையில், அவர்களால் பணியில் சேர முடியவில்லை. அதற்குள் அவர்களின் 7 ஆண்டு தகுதிக்காலம் முடிவடைந்து விட்டது. இப்போது அவர்கள் மீண்டும் தகுதித்தேர்வு எழுதி தான் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற முடியும் என்று அரசு அறிவித்து விட்டது. அவர்களில் பெரும்பான்மையினர் 40 வயதைக் கடந்தவர்கள் எனும் நிலையில், அவர்கள் மீண்டும் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலும் கூட அவர்களால் ஆசிரியர் பணியில் சேர முடியாது. அவர்கள் எந்தத் தவறும் செய்யாத நிலையில், கொள்கை முடிவு என்ற பெயரில் அவர்களை தண்டிப்பது எவ்வகையில் நியாயம்?

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 7500 இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட 12,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அதன்படி அடுத்த சில ஆண்டுகளுக்கு ஆசிரியர் நியமனம் இருக்காது எனும் நிலையில், இப்போது 35 வயதைக் கடந்த எவருக்கும் இனி ஆசிரியர் பணி கிடைக்காது. ஆண்டுதோறும் தொடர்ச்சியாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்வது சமூகநீதிக்கு எதிரான செயல் ஆகும்.

 ஆசிரியர் பணிக்கு வயது வரம்பை நீக்குவது எந்த வகையிலும் தகுதி குறைவு இல்லை. ஒருவர்  50 வயதில் ஆசிரியர் பணியில் சேருகிறார் என்றால், அதுவரை அவர் பணியில் இல்லாமல் இருந்தார் என்று பொருள் அல்ல. மாறாக, அதுவரை அவர் குறைந்த ஊதியத்தில் தனியார் பள்ளியில் பணியாற்றி வந்திருப்பார். அப்படிப்பட்டவரை நியமிக்கும் போது, அவரது அனுபவம் கற்பித்தலுக்கு கூடுதல் தகுதியாக  இருக்குமே தவிர, தகுதிக் குறைவாக இருக்காது. இவற்றையெல்லாம் கடந்து ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு இல்லை என்று கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்த நடைமுறையை இப்போது அவசர அவசரமாக மாற்ற வேண்டிய தேவை எதுவும் இல்லை. இதை தமிழக அரசு உணர வேண்டும்.

 அரசு பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு 40 வயது உச்சவரம்பு என்ற தமிழக அரசின் ஆணை செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்களில் ஆசிரியர் பணி கனவு சிதைக்கப் படும். எனவே, ஆசிரியர் பணி நியமனத்திற்கு வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையை திரும்பப் பெற்று, இப்போதுள்ள நடைமுறையே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

2 comments:

 1. தமிழக அரசின் கொள்கை முடிவு தமிழக மக்களை கொல்வது என்று அரசாணை அறிவித்துக்கொள்ளுங்கள்.
  உங்களுக்கு வாக்களித்த பாவத்துக்கு அதையாவது தாருங்கள்!!!.
  அரசின் கொள்கை முடிவு சூப்பர்! சூப்பர்!! சூப்பர்!!! <<>>.

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே பெரும்பாலான அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளோர் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்பத்தாரையும் அதிருப்திக்கு உள்ளாக்கும் செயல் இது.

   Delete

Dear Reader,

Enter Your Comments Here...