ஜேஇஇ வரைபடத் தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியிடக் கோரிய மனு தள்ளுபடியானது.
மதுரையைச் சேர்ந்த கவின்ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மேல்நிலைக்கல்வி முடித்த நான், ஐஐடியில் பிஆர்க் படிப்பதற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வில் பங்கேற்றேன். தேசிய தேர்வு முகமை தேர்வுகளை நடத்தியது. 3வது தேர்வான வரைபடத் தேர்வுக்குரிய கீ ஆன்சர் வெளியிடப்படவில்லை
. 3வது தேர்வு ஆப்லைனில் தாள் மூலம் எழுதப்பட்டது. எனவே, கீ ஆன்சரை வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி ஆஜராகி, ‘‘ஜேஇஇ நுழைவுத் தேர்வு தொடர்பான விவகாரங்கள் அனைத்தும் டெல்லியின் எல்லைக்கு உட்பட்டது.
டெல்லி நீதிமன்றத்தில் தான் முறையிட முடியும். இங்கு மனு செய்யமுடியாது. இவற்றை மதிப்பீடு செய்ய நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைமுறைகளை முழுமையாக அறிந்து கொள்ளாமல் மனு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரருக்கு ஜேஇஇ நுழைவுத்தேர்வில் மதிப்பெண் முறை தெரிந்துள்ளது. இந்த மனுவை அனுமதித்தால் ஏராளமான வழக்குகள் தாக்கலாகும்.
மதிப்பெண் பட்டியலில் கடைசி நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டியது வரும். இதனால் நாடு முழுவதும் குழப்பம் ஏற்படும். வரைபடத்தேர்வில் ஒவ்வொரு நிலைக்கும் மதிப்பெண் கேட்கிறார் மனுதாரர்.
இதை பார்க்கும் போது திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி கதை தான் நினைவுக்கு வருகிறது. அந்தப்படத்தில் தருமியின் கோரிக்கையைப் போல, மனுதாரரின் கோரிக்கையையும் ஏற்க முடியாது. வரைபடத் தேர்வின் விடையை வெப்சைட்டில் வெளியிட வேண்டியதில்லை.
இந்த வழக்கில் மனுதாரருக்கு, அடுத்த தேர்வில் வெற்றிப்பெற வாழ்த்து சொல்வதை தவிர வேறு நிவாரணம் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...