பெங்களூரு:
பள்ளிக்கு புதிதாக வகுப்பறை கட்டித்தரும்படி வேண்டுகோள் விடுத்து, போராட்டம் நடத்திய அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியரை சஸ்பெண்ட் செய்த கல்வித்துறையின் செயலுக்கு கண்டனம் எழுந்துள்ளது.
பெலகாவி மாவட்டத்தின், நிடகுந்தி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. வகுப்பறை பற்றாக்குறை உள்ளது.
ஒரே வகுப்பறையில் நிர்ணயித்த அளவை விட, அதிகமான மாணவர்கள் அமர்கின்றனர். கூடுதல் வகுப்பறைகள் கட்டும்படி, ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வகுப்பறை கட்ட வேண்டி ஆசிரியர் வீரண்ணா உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினார். இதனால் வீரண்ணாவை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது.
இதற்கு இலக்கியவாதிகள் மருள சித்தப்பா, வசுந்தரா பூபதி உட்பட, பல்வேறு இயக்கியவாதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறும்படி முதல்வர் சித்தராமையாவுக்கும், கல்வித்துறை அமைச்சர் மதுபங்காலப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முதன்மை செயலர் சசிகுமார் கூறியதாவது:
புதிய வகுப்பறைகள் கட்டும்படி வலியுறுத்தி, போராட்டம் நடத்திய ஆசிரியர் வீரண்ணாவை சஸ்பெண்ட் செய்தது சரியல்ல.
இது ஒரு பள்ளியின் பிரச்னை இல்லை. லட்சக்கணக்கான ஆசிரியர்கள் குரல் கொடுத்துள்ளனர். ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள், என்னிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஒழுங்கு நடவடிக்கைக்கு பயந்து, பெரும்பாலான ஆசிரியர்கள் மவுனமாக உள்ளனர். அவர்களால் குரல் எழுப்ப முடியவில்லை. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியரை, கவுரவத்துடன் பணிக்கு அழைத்து வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...