வால்பாறையில் உள்ள அரசு துவக்கபள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து வரும் நிலையில், வெளிமாநில குழந்தைகள் சேர்க்கைக்காக பள்ளி ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.
வால்பாறை மலைப்பகுதியில், 53 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், சில பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.
வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் அந்தந்த பகுதியில் உள்ள துவக்கப்பள்ளிகளில் சேர்த்து தமிழ் மீடியத்தில் படிக்கின்றனர்.
கடந்த கல்வியாண்டில் வால்பாறையில் உள்ள துவக்கப்பள்ளிகளில், 1ம் வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கை, 250 ஆக இருந்தது. இந்த கல்வியாண்டில் இது வரை, 135 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பள்ளி ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வால்பாறையில் உள்ள, 53 துவக்கப்பள்ளிகளில், மொத்தம், 1,060 குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களில், 700 பேர் வெளிமாநில குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில் பல்வேறு காரணங்களால் எஸ்டேட் தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க, எஸ்டேட் நிர்வாகத்தினர் ஒப்பந்த அடிப்படையில் வெளிமாநிலத் தொழிலாளர்களை வால்பாறைக்கு வரவழைத்து தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.
அவர்களின் குழந்தைகள், இங்குள்ள அரசு துவக்க பள்ளிகளில் சேர்ந்து தமிழ் மீடியத்தில் படிக்கின்றனர். அங்கன்வாடியில் இருந்து தமிழில் படிப்பதால், துவக்கப்பள்ளியில் வெளிமாநில குழந்தைகள் தமிழ் மீடியத்தில் சிறப்பாக படிக்கின்றனர்.
இந்த கல்வியாண்டில், வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் வருகை அதிக அளவில் உள்ளதால், கடந்த ஆண்டை விட சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெளிமாநில குழந்தைகள் சேர்க்கைக்காக காத்திருக்கிறோம், என்றனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...