தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த (2025-26) கல்வி ஆண்டில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி முடிவடைந்தது. 2.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதில், 1.85 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணமும் செலுத்தி, ஆன்லைன் பதிவை முழுமை செய்தனர்.
இதையடுத்து, முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 29-ம் தேதியும், பொது பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 30-ம் தேதியும் கல்லூரி கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் தகவல் பலகையிலும் இது ஒட்டப்பட்டது.
விரும்பிய பாடப் பிரிவை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்கு ஜூன் 2, 3-ம் தேதிகளிலும், பொது பிரிவினருக்கு ஜூன் 4 முதல் 14-ம் தேதி வரையும் நடைபெறும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்தது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. காலை 9 மணிக்கு தொடங்கிய கலந்தாய்வு மாலை 6 மணிக்கு மேல் நீடித்தது.
சென்னை மாநில கல்லூரியில் சிறப்பு பிரிவினருக்கு மொத்தம் உள்ள 198 இடங்களில் நேற்று 120-க்கும் மேற்பட்டோருக்கு சேர்க்கை ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு, அவர்கள் உடனடியாக கட்டணத்தை செலுத்தி சேர்ந்துள்ளதாக கல்லூரி முதல்வர் ஆர்.ராமன் தெரிவித்தார். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...