விரைவில் 1 முதல் 8ம் வகுப்பு வரை புதிய வண்ணத்தில் சீருடைகள்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

கைத்தறி மற்றும் துணிநூல் துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியிருப்பதாவது:
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் 1985-1986ம் ஆண்டு முதல் அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் மூலம்  டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள்  பயனடைந்து வருகின்றனர்.இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் கல்வி ஆண்டில் 282.59 கோடி மதிப்பிலான 498.81 லட்சம் மீட்டர் சீருடை துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வினியோகம்  செய்யப்பட்டுள்ளது. 2018-19ம் கல்வி ஆண்டில் விலையில்லா சீருடை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட அனுமதி அளித்துள்ளது.
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புதிய வண்ணத்திலான சீருடைகள் வழங்க அரசு ஆணை வழங்கியுள்ளது. அதன்படி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘‘அக்வா க்ரீன்'' மற்றும் ‘‘மெடா க்ரீன்'' வண்ணத்திலும், 6ம் வகுப்பு முதல்  8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘‘லைட் பிரவுன்'' மற்றும் ‘‘மெரூன்'' வண்ணத்திலும் சீருடைகள் வழங்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் இத்திட்டத்திற்கு தேவையான சீருடை துணிகள் உற்பத்தி மற்றும் பதனிடும் பணி நடைபெற்று வருகிறது. முதல் இணைக்கான 130 லட்சம் மீட்டர் துணிகள் சமூகநலத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
 இரண்டாவது இணைக்கான சீருடை துணிகள் ஜூன் மாதம்  வினியோகம் நிறைவடைய உள்ளது. மூன்றாம் மற்றும் நான்காம் இணைக்கான சீருடை துணிகள் செப்டம்பரில் வினியோகம் செய்து முடிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this

0 Comment to "விரைவில் 1 முதல் 8ம் வகுப்பு வரை புதிய வண்ணத்தில் சீருடைகள்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...