பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், புதிய தொழில்நுட்பங்களை புகுத்தவும் நாடு முழுவதும் 10 லட்சம் பள்ளிகளில் 16.60 கோடி குழந்தைகளுக்கு புதிய கல்விமுறையை 2018-19 கல்வியாண்டு முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
இதற்காக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வரைவு ஆவணம் தயார்செய்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி கடந்த மாதம் கருத்துகளை கேட்டுப் பெற்றுள்ளது.
அரசுகளின் பங்களிப்பு என்ன?: மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் இந்தத் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பும், மாநில அரசின் பங்களிப்பும் இருக்கும். தமிழகம் உள்பட 18 மாநிலங்கள் மற்றும் புது தில்லி, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் 60:40 விகிதத்தில் பங்களிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம், மணிப்பூர் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு 90:10 விகிதத்தில் பங்களிப்பு எனவும், சண்டீகர், அந்தமான்-நிக்கோபார், லட்சத்தீவு ஆகியவற்றுக்கு மத்திய அரசே 100 சதவீதம் நிதி வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
பயன் பெறும் வகுப்புகள்: இத்திட்டமானது ஒன்றாம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை முழுமையாக அமல்படுத்தும் வகையில், வடிவமைக்கப்பட்டிருந்தாலும் இப்போதுள்ள அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் அமல்படுத்தப்படுகிறது.
"சமக்ர சிக்ஷா அபியான்': பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் சர்வ சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ), ராஷ்ட்ரீய மாத்யமிக் சிக்ஷா அபியான் (ஆர்எம்எஸ்ஏ) ஆகிய 2 திட்டங்களையும் இணைத்து "சமக்ர சிக்ஷா அபியான்' (எஸ்எம்எஸ்ஏ) என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2001- ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு செயல் வழிக் கற்றலும், 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறையிலும் கல்வி கற்பித்தல் நடைபெற்றது.
இதில், 6-ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, பள்ளி வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளைக் கட்டுவது, பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிதல், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான கல்வி, பெண் கல்வி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இடம் பெற்றிருந்தன. 2012-இல் இத்திட்டம் முடிவடைந்தாலும் கால நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.
இதேபோல, 2005-ஆம் ஆண்டு முதல் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) அமல்படுத்தப்பட்டது. இதில், 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கற்பித்தல் முறையை மேம்படுத்தி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வியை உறுதி செய்தது. இப்போது, இரு திட்டங்களையும் இணைத்து நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஒரே கல்வி திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான கல்வி செயல்பாடுகள் சமக்ர சிக்ஷா அபியானின் கீழ் மேற்கொள்ளப்படும்.
ஏற்கெனவே எஸ்எஸ்ஏ மற்றும் ஆர்எம்எஸ்ஏ திட்டங்களுக்குத் தனித்தனியே அலுவலர்கள் நியமித்து மாநில அளவில், மாவட்ட அளவில், வட்டார அளவில் கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்நிலையில், இரண்டும் ஒன்றாக இணைக்கப்படுவதால் இவ்விரு திட்டங்கள் சார்ந்த அலுவலகங்களும் இனி கலைக்கப்படும். அவற்றுக்குப் பதிலாக
"சமக்ர சிக்ஷா அபியான்' திட்டத்தை செயல்படுத்த புதிய அலுவலர்களைக் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். ஒரே அலுவலகம் செயல்படும். கல்வித்துறை அமைச்சரைத் தலைவராக கொண்ட ஆளுகை குழுவும், பொதுக் கல்வித் துறை செயலாளரைக் கொண்ட நிர்வாகக் குழுவும் இடம் பெறும். புதிய குழுக்களுக்கான அதிகாரங்களும், கட்டுப்பாடுகளும் தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டு மாநிலங்களிடம் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எப்படி?: முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரைத் தலைமையாகக் கொண்டு, தலைமைச் செயலர், பள்ளிக் கல்விச் செயலர் ஆகியோர் நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மூலம் மாநில அமலாக்க அமைப்பை உருவாக்கி, மாநில திட்ட இயக்குநர் நியமனம் செய்து, பள்ளிக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குத் தனியாக ஒரு இயக்குநர் (எஸ்சிஇஆர்டி), பள்ளிகளின் மேம்பாடு, ஆசிரியர்கள் பயிற்சிக்கு தனி இயக்குநர், மாணவர்களின் உரிமைகள் பாதுகாப்புக்கு தனி ஆணையம் அமைக்கப்படும். தொழில்நுட்பக் குழுவும் ஏற்படுத்தப்படும். இந்த மாநிலக்குழுவின் நிர்வாக வடிவமைப்பின்படியே, மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் குழுக்கள் அமைத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஒதுக்கீடு எவ்வளவு?: இத் திட்டத்துக்காக 2018-19ஆம் ஆண்டுக்கு மட்டும் மத்திய அரசு பங்களிப்பாக ரூ.33 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ரூ.1427.30 கோடியை மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்தின் பங்களிப்பான 40 விழுக்காடு தொகையும் சேர்த்தால் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதுதொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் குழுக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக அரசு இத்திட்டத்துக்கு முழுமையான ஒப்புதல் அளித்தவுடன் அதனை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு முறைப்படி தெரிவித்து தமிழகத்துக்கான முழு மத்திய நிதி ஒதுக்கீட்டைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் குழுக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக அரசு இத்திட்டத்துக்கு முழுமையான ஒப்புதல் அளித்தவுடன் அதனை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு முறைப்படி தெரிவித்து தமிழகத்துக்கான முழு மத்திய நிதி ஒதுக்கீட்டைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...