‘நீட்’ தமிழ் வினாத்தாளில் தவறான 49 கேள்விகளுக்கு 196 மதிப்பெண் கோரி வழக்கு

நீட் தேர்வு தமிழ் கேள்வித்தாளில் தவறாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு 196
மதிப்பெண் வழங்கக்கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு: நீட் தேர்வில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து 180 வினாக்கள் கேட்கப்பட்டன. 4 விடைகள் அளிக்கப்பட்டு ஒரு சரியான விடையை தேர்வு செய்யும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருந்தது. வினாத்தாள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தில் பின்பற்றப்படும் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து நீட் தேர்வில் கேள்விகள் தேர்வு செய்யப்படுவதில்லை. இதனால் தமிழக மாணவர்கள்பல்வேறு பயிற்சி மையங்களுக்குச் சென்று பயின்றனர். இத்தேர்வில் தமிழ் வினாத்தாளில்49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. இயற்பியல் பாடப்பிரிவில் 10 வினாக்களும், வேதியியல் பாடப்பிரிவில் 6 வினாக்களும், உயிரியல் பாடப்பிரிவில் 33 வினாக்களும் தவறாக கேட்கப்பட்டிருந்தன.சிபிஎஸ்இ-க்கு மனுஇதனால் தமிழ் மொழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்டிருந்த 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கை தொடர்பாக மே 10-ம் தேதி சிபிஎஸ்இ-க்கு மனு அனுப்பி உள்ளேன். எனவே, தவறாக கேட்கப்பட்டிருந்த 49 வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கவும், நீட் தேர்வு முடிவு வெளியிட இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.
இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வில் நேற்று காலை முறையீடு செய்யப்பட்டது. இதையேற்று பிற்பகலில் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். அப்போது அரசு தரப்பில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டதால் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டியதில்லை என்று கூறி, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Share this

0 Comment to "‘நீட்’ தமிழ் வினாத்தாளில் தவறான 49 கேள்விகளுக்கு 196 மதிப்பெண் கோரி வழக்கு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...