கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளிக்கு நிகராக, அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக, பள்ளி நிர்வாகமும், கிராம மக்களும் இணைந்து சொந்தமாக பஸ் ஒன்றை வாங்கியுள்ளனர்.
இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தில், அரசியல் கட்சி தலைவர்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் பேனர், கட்அவுட் வைத்து, பணத்தை வீணாக வாரி இறைக்கும் ரசிகர் மன்றங்களுக்கு இடையே, மாணவர்களின் எதிர்காலத்தையும், அவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, இளைஞர் நற்பணி மன்றம் என்ற பெயரில் நற்பணிகளை மட்டுமே செய்யும் மன்றங்களும், அந்த மன்றங்களில் உள்ளோரின் நடவடிக்கையால் சொந்த கிராமமே பெருமை கொள்ளும் நிகழ்வுகளும் கிருஷ்ணகிரி அருகே நடைபெற்றுள்ளது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையில், 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கும்மனூர் கிராமம். இந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டு வாழ்கின்றனர்.
கிராம இளைஞர்கள் ஒருங்கிணைந்து மகாத்மா காந்தி நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு மன்றத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த மன்றத்தில், தமிழகத்தில் எங்கும் செய்யாத ஒரு நற்பணியை செய்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளனர்.
இந்த கும்மனூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கடந்த 20112012ம் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியானது.
இப்பள்ளிக்கு, கும்மனூர் மட்டுமின்றி அருகில் உள்ள ராகிமானப்பள்ளி, புலியரசி, மேலூர், கரிக்கல்நத்தம், ஜிஞ்சுப்பள்ளி, மெட்டுப்பாறை, கொண்டேப்பள்ளி, சஜ்ஜலப்பட்டி, தாசரப்பள்ளி, புதூர், கொம்பள்ளி, சின்னராகிமானப்பள்ளி என 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் படிக்க வருகின்றனர்.
தற்போது பள்ளியில் 106 மாணவிகள், 64 மாணவர்கள் என மொத்தம் 170 பேர் படிக்கின்றனர்.
ஒரு தலைமை ஆசிரியரும், 7 ஆசிரிய, ஆசிரியைகளும் பணியாற்றி வருகின்றனர்.
கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு சரிவர போக்குவரத்து வசதியில்லாததால், ஆண்டுதோறும் படிக்கு வரும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது.
இதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில், கும்மனூர் கிராம மக்கள், மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஒன்று கூடி ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.
அப்போது, மாணவ, மாணவிகள் பள்ளிக்கு பாதுகாப்புடன் வந்து செல்ல, தனியார் பள்ளியை போல் நிரந்தர, அதேவேளையில் சொந்தமாக பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தனர். அதைதொடர்ந்து பஸ் வாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதற்காக பொதுமக்கள், தானம் செய்ய முன்வருவோர், மாணவர்கள் மீது அக்கறை கொண்ட நிறுவனத்தினர் என பலரையும் சந்தித்து நன்கொடை பெற்றனர். இதன்மூலம் 5 லட்சம் ரூபாய் வரையில் நிதியுதவி கிடைத்தது.
அதைதொடர்ந்து, மாவட்ட கல்வித்துறை அனுமதியுடன், தலைமை ஆசிரியர் என்ற பெயரில் வாகனம் பதிவு செய்யப்பட்டு தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த பஸ் மூலமே பள்ளிக்கு வருகின்றனர்.
சிரமமின்றி அவர்கள் பள்ளிக்கு சென்று வருவதை கண்டு பெற்றொரும், ஊர் முக்கிய பிரமுகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும், மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தினருக்கும், பள்ளி நிர்வாகத்தினருக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணன் கூறுகையில், ‘கும்மனூர் அரசு உயர்நிலைப்பள்ளி சிறந்த பள்ளி என்ற பெருமையை பெற்றுள்ளது.
இப்பள்ளிக்கு கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் பாதுகாப்புடன் வந்து செல்ல ஏதுவாக பஸ் வாங்க முடிவு செய்தோம்.
அதற்கு தேவையான நிதியை நன்கொடையாக பெற்றோம். அதை கொண்டு பஸ்சை வாங்கி இயக்கி வருகிறோம்.
நாங்கள் பெற்ற நன்கொடையை வங்கியில் டெபாசிட் செய்து, அதில் இருந்து கிடைக்கும் வட்டியை கொண்டு பஸ்சுக்கான டீசல் செலவை சமாளித்து வருகிறோம்.
பஸ்சை இயக்க நல்ல மனம் படைத்த தன்னார்வலர்கள் இருவர் முன்வந்துள்ளனர்.
பள்ளிக்கு நன்கொடை வழங்கி, மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்,’என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...