அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்தவும், மாணவ,
மாணவிகளிடையே ஒழுக்கத்தைக் காத்திட 17 வகையான கட்டுப்பாடுகளை விதித்து, பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் உறுதிமொழி படிவம் வாங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இடையே அவ்வப்போது ஏற்படும் மோதல்களைத் தவிர்த்திட தமிழக பள்ளிக் கல்வித்துறை இந்தாண்டு பல அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதில், மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு 11 வகையான கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.
அதனை பின்பற்றி, கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ள கடலுார் மாவட்டத்தில் கல்வித் தரத்தை உயர்த்தவும், மாணவ, மாணவியர்களிடையே ஒழுங்கினை காத்திட உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு 17 வகையான கட்டுப் பாடுகளை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கட்டுப்பாடுகள் விபரம்
பள்ளி சீருடைகள் அரசு அங்கீகரித்த வடிவில் மற்றும் வண்ணத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.
எந்தவிதமான குறிப்புகளை வெளிப் படுத்தும் அடையாளங்கள் இருக்கக்கூடாது.சட்டையின் நீளம் 'டக்இன்' செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.
மாணவர்கள் கறுப்பு கலர் சிறிய பக்கிள் கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும். இதில் எந்தவித அடையாள குறியீடுகளும் இருக்கக்கூடாது.
சட்டை பட்டன்கள் அனைத்தும் முழுமையாக போட்டிருக்க வேண்டும்.
மாணவரின் தலைமுடி சரியான முறையில் ஒரே சீராக வெட்டப்பட்டு, நன்கு படியும் வகையில் தலை சீவி பள்ளிக்கு வர வேண்டும்.
மாணவர் கைகளில் ரப்பர் பேண்டு, வளையம், கயிறு, காதுகளில் கம்மல், கடுக்கன், கழுத்தில் செயின் போன்ற எந்த அணிகலன்களும் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது
உடலில் எந்த இடத்திலும் பச்சை குத்தி வரக்கூடாது. பள்ளி துவங்க 15 நிமிடத்திற்கு முன்பாக பள்ளிக்குள் வந்துவிட வேண்டும்.
பள்ளிக்கு வந்த பிறகு பள்ளி நேரம் முடியும்வரை எக்காரணத்தைக் கொண்டும் வெளியே செல்ல அனுமதிக்கபடமாட்டாது.
அரசின் சத்துணவு திட்டத்தில் சேராத மாணவ, மாணவியர்கள் மதிய உணவை காலை பள்ளிக்கு வரும்போதே எடுத்து வந்துவிட வேண்டும்.
மதிய வேளையில் பள்ளியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். பள்ளிக்கு மொபைல் போன்களை கொண்டு வரக்கூடாது.
மீறி எடுத்து வந்தால் பறிமுதல் செய்யப்படும். மாணவ, மாணவியர்கள் பள்ளியை துாய்மையாக வைத்திருக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். சுவரில் எழுதுவதோ, படங்கள் வரைவதோ கூடாது.
பள்ளியின் மேசை, நாற்காலி உள்ளிட்ட எவ்வித சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தக்கூடாது. மாணவ மாணவியர்கள் தங்களுக்குள் ஒற்றுமை யாக இருக்க வேண்டும்.
ஒருவருக்கொருவர் தரக்குறைவாக பேசிக் கொள்வதோ, தாக்கிக் கொள்வதோ கூடாது. மீறினால் போலீஸ் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களின் பெற்றோர் அல்லது அவர்களால் நியமிக்கப் பட்ட பாதுகாவலர் தவிர வேறு எவரும் பள்ளிக்குள் வர அனுமதி கிடையாது.
பள்ளி நேரம் முடிந்தவுடன் உடனடியாக மாணவ, மாணவியர்கள் வீட்டிற்கு சென்று விட வேண்டும்.
பள்ளிக்கு வெளியே கூடி பேசுவது, விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
இவ் விஷயத்தில் பெற்றோர்கள் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.
மாணவ, மாணவியர்கள் கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொது இடங்களை அசுத்தம் செயயக்கூடாது.
எவ்வித தேவைக்காகவும் கூரிய பொருட்களான கத்தி, ஊசி, பிளேடு போன்ற பொருட்களை பள்ளிக்கு எடுத்து வரக்கூடாது.
மேற்கூறிய 17 கட்டுப்பாடுகளை அடங்கிய படிவத்தை 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து மாணவ, மாணவியர்களிடம் கொடுத்து, கட்டுபாடுகளை அறிந்து கொண்டோம்.
அதனை முழுமையாக கடைபிடிப்போம் என உறுதி அளிக்கிறோம். தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டுப்படுகிறோம்.
மேலும், பள்ளியில் நல்ல மாணவன் என்ற நற்பெயர் பெற்று பள்ளிக்கும், நாட்டிற்கும் நற்பெயரை ஈட்டித் தருவேன் என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் உறுதி அளிக்க வேண்டும். அதில் பெற்றோரும் கையெழுத்திட வேண்டும்.
இந்த உறுதிமொழிப் படிவங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொண்டு, உறுதிமொழி படிவ விபரங்கள் குறித்து வரும் 22ம் தேதி அன்று அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...