கால்பந்து சீசன்: பிஎஸ்என்எல் சலுகை!
ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடரைக் கண்டுகளிக்கும் விதமாகத் தனது வாடிக்கையாளர்களுக்குப் புதிய டேட்டா திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை தொடர் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. கால்பந்து போட்டிகளுக்கான ரசிகர்கள் இந்தியாவில் அதிகமாக இருப்பதால் பிஎஸ்என்எல் நெட்வொர்க் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. ரூ.149 கட்டணத்திலான இத்திட்டத்தில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் முடியும் வரையில் தினமும் 4 ஜிபி அளவிலான டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் உலகக் கோப்பை தொடரின் போட்டிகளை நேரடியாக லைவ் ஸ்ட்ரீமிங்கில் இச்சலுகை வழியாகத் தடையில்லாமல் காணலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய நேரப்படி கால்பந்து போட்டிகள் மாலை 5.30 மணி, இரவு 8.30, நள்ளிரவு 11.30 மணி ஆகிய நேரங்களில் தொடங்கி நடைபெறும். இந்த மூன்று போட்டிகளையும் வாடிக்கையாளர்கள் இடைவிடாது எவ்வித தடையுமின்றி பிஎஸ்என்எல் சலுகையில் காண இயலும். ஒரு ஜிபி டேட்டாவுக்கு 75 பைசா என்ற அளவிலேயே இத்திட்டத்தின் கீழ் செலவாகிறது என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறுகிறது. ரூ.149 கட்டணத்திலான இச்சலுகையில் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும், பிரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும்.

Share this