புதுடில்லி: மலிவு விலை வீடுகள் திட்டத்தின் கீழ், குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்கான உச்ச வரம்பை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதனால், மலிவு விலை வீடுகள் அதிகளவில் கட்டப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது. 'நலிவடைந்த பொதுத் துறை நிறுவனங்களிடம் உபரியாக உள்ள நிலங்களை, மலிவு விலை வீடுகள் கட்ட பயன்படுத்தி கொள்ளலாம்' என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நலிவடைந்த பிரிவினருக்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.பி.எஸ்.எல்., எனப்படும், முன்னுரிமை துறை கடன் முறையில் வழங்கப்படும் இந்த கடன்களுக்கு, வங்கிகள் வழக்கமாக அளிக்கும் வட்டி விகிதத்தை விட, மிகக் குறைவான வட்டியே வசூலிக்கப்படும்.பெருநகரங்களில், பி.எஸ்.எல்., முறையில், மலிவு விலை வீடுகள் கட்ட, 28 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த உச்ச வரம்பை, தற்போது, 35 லட்சம் ரூபாயாக உயர்த்தி, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பிற நகரங்களில், பி.எஸ்.எல்., முறையில் மலிவு விலை வீடுகள் கட்ட, வழங்கப்பட்டு வந்த, 20 லட்சம் ரூபாய் கடன் உச்ச வரம்பை, 25 லட்சம் ரூபாயாக, ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது.மலிவு விலை வீட்டுக்கு, ஒட்டு மொத்த செலவு, பெருநகரங்களில், 45 லட்சம் ரூபாய், பிற நகரங்களில், 30 லட்சம் ரூபாய் என வரையறை செய்யப்பட்டுள்ளது.'ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கையால், குறைந்த விலை வீடுகள் கட்டும் துறை,அதிகளவில் ஊக்கம் பெறும்' என, நிபுணர்கள் கூறுகின்றனர். 'நலிவடைந்த பொதுத் துறை நிறுவனங்களுக்கு சொந்தமாக ஏராளமான உபரி நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை, மலிவு விலை வீடுகள் கட்டும் திட்டத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்' என, அரசு முடிவு செய்துள்ளது. இது, மலிவு விலை வீட்டு திட்டத்துக்கு நிலம் கிடைப்பதில் உள்ள சிரமங்களை போக்கும் என கூறப்படுகிறது.இதற்கிடையே, மத்திய அரசு இயற்றிய, திவால் சட்டத்தை அமல்படுத்த, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக, அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டப்படி, வீடுகள் வாங்குவோர், நிதிசார்ந்த கடன்தாரர்களாக கருதப்படுகின்றனர். ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் வீடுகள் வாங்க முன்பதிவு செய்தபின், அந்த நிறுவனங்கள், குறித்த காலத்தில் வீடுகள் கட்டி தராததால், ஏராளமானோர் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.இந்த சூழ்நிலையில், அரசின் புதிய திவால் சட்டத்தில் வீடுகள் வாங்குவோர், நிதி சார்ந்த கடன்தாரர்களாக கருதப்படுவதால், சி.ஓ.சி., எனப்படும், கடன்தாரர்கள் குழுவில், அவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.இதனால், 'இது தொடர்பான விவகாரங்களில் முடிவு எடுக்கும் நடைமுறையில், அவர்களும் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக கருதப்படுவர்' என, அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி யோசனை : மலிவு விலை வீடுகள் பிரிவில் வழங்கப்படும் கடனில், வாராக் கடன்கள் அதிகரிப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிகள், தங்கள் சோதனை நடைமுறைகளை பலப்படுத்த வேண்டும் என்றும், கடன் வசூலிப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைளை அதிகரிக்க வேண்டும் என்றும், ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை விபரம்: வீட்டு கடன் தொடர்பான தகவல்களை கவனமாக பரிசீலித்ததில், இரண்டு லட்சம் ரூபாய் வரை அளிக்கப்படும் கடன் பிரிவில், அதிகளவு வாராக் கடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரிவு கடன், வசூலிக்க முடியாத வகையில், அதிக ஆபத்துடன் கூடியதாக உள்ளது.எனவே, இரண்டு லட்சம் ரூபாய் வரை அளிக்கப்படும் கடன்களை, கூடுதல் சோதனைகளுக்கு பின் அளிக்க வேண்டும். அவற்றை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...