NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

20 சதவீதம் கேஷ்பேக் அளிக்க திட்டம் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு சலுகை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு

பொருட்கள் வாங்கும் போது மின்னணு
முறையில் பணம் செலுத்துபவர்களுக்கு வரிக்கழிவு வழங்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தியாவில் அமலில் இருந்து வந்த பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) கொண்டுவரப்பட்டது. 
இந்த புதிய வரிவிதிப்பு முறை கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. பொருட்கள் மற்றும் சேவைகள் மீது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 விகிதங்களில் இந்த வரி விதிக்கப்படுகிறது. 
அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு இந்த வரி விதிக்கப்படுவது இல்லை. மேலும் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மதுபானங்கள் சரக்கு சேவை வரி வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. அவற்றுக்கு தனியாக வரி விதிக்கப்படுகிறது. 
சரக்கு சேவை வரி தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்ய மத்திய நிதி மந்திரி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மாநில நிதி மந்திரிகள் உறுப்பினர்களாக இடம்பெற்று உள்ளனர். இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி ஆலோசனை நடத்தி வருகிறது. 
குறைகிறது
இந்த கவுன்சில் எடுத்த முடிவின்படி, பல்வேறு பொருட்களின் மீதான சரக்கு சேவை வரி அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. பல பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டு இருக்கிறது. 
மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் நேற்று கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், காலப்போக்கில் ஜி.எஸ்.டி. வரிவிகிதங்கள் 3 வகையாக குறைக்கப்படுவதோடு எளிமையாக்கப்படும் என்றும் தெரிவித்தார். 
அதாவது 5 சதவீதம், 15 சதவீதம், 25 சதவீதமாக மாற்றி அமைக்கப்படும் என்று தெரிகிறது. தற்போதுள்ள 12 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஒருங்கிணைக்கப்பட்டு 15 சதவீதமாக மாற்றப்படும் என்றும், அதிகபட்சமாக உள்ள 28 சதவீத ஜி.எஸ்.டி. 25 சதவீதமாக குறைப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 
இந்த நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 29-வது கூட்டம், மத்திய நிதி மந்திரி (பொறுப்பு) பியூஷ் கோயல் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பல்வேறு மாநிலங்களின் மந்திரிகள் கலந்து கொண்டனர். 
கூட்டம் முடிந்ததும் பியூஷ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- 
20 சதவீதம் 
மின்னணு மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க பீகார் துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி தலைமையிலான மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. அதன்படி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ரூபே கார்டு மற்றும் பீம் செயலி, யு.எஸ்.எஸ்.டி. மூலம் பணம் செலுத்தினால் மொத்த ஜி.எஸ்.டி.யில் 20 சதவீதம் கழிவு (கேஷ் பேக்) வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 
இந்த வரிக்கழிவு அதிகபட்சம் ரூ.100 ஆக இருக்கும். பரீட்சார்த்த அடிப்படையில் சில மாநில அரசுகள் தாமாக முன்வந்து இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளன. இந்த திட்டத்துக்கு நல்ல பலன் இருந்தால் மாநிலங்கள் தொடர்ந்து இதை செயல் படுத்தலாம், இல்லையேல் கைவிட்டுவிடலாம். இது மாநிலங்களின் விருப்பத்தை பொறுத்தது. 
மந்திரிகள் குழு 
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி ஆய்வு செய்ய நிதி இலாகா ராஜாங்க மந்திரி சிவ பிரசாத் சுக்லா தலைமையில் துணைக்குழு ஒன்று அமைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த குழுவில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, பீகார் துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி மற்றும் பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களின் நிதி மந்திரிகள் இடம்பெறுவார்கள். 
நிறைய பேருக்கு வேலைவாய்ப்பை அளிப்பதால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கவேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன. 
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 28 மற்றும் 29-ந் தேதிகளில் கோவாவில் நடைபெறும். 
இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார். 
அமைச்சர் ஜெயக்குமார் 
அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீதான வரியை குறைக்க வேண்டும், காலதாமதமாக செலுத்தும் வரியின் மீதான வட்டி விகிதத்தை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகள் தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டன. 
தமிழகத்தில் சிலை கடத்தல் விவகாரத்தில் குற்றவாளிகள் கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இந்த விவகாரத்தில் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால்தான் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. 
இவ்வாறு அவர் கூறினார்.  




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive