பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு: செப்.24-இல் தொடக்கம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு
செப்.24-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் செப்.5 முதல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: 
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்.24-ஆம் தேதி முதல் அக்.3-ஆம் தேதி வரை நடைபெறும். அனைத்து தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.45 மணிக்கு முடிவடையும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்குச் சென்று செப்.5-ஆம் தேதி புதன்கிழமை முதல் செப்.10-ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 5.45 மணிக்குள் (செப்.9 ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்: - ஏற்கெனவே தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள் (எஸ் வகையினர்): முந்தைய பருவங்களில் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள் அவர்கள் தோல்வியுற்ற பாடங்களில் மட்டும் தற்போது தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்தைப் பொருத்தவரை செய்முறை, கருத்தியல் என்ற இரு பகுதிகளில் எந்தப் பகுதியில் தோல்வியடைந்தாலும் தோல்வியுற்ற பகுதிக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம். 
முதன்முறை பத்தாம் வகுப்பு தேர்வெழுதுபவர்கள் (எஸ்.பி. வகையினர்): இந்த வகை தேர்வர்கள் 1.9.2018 அன்று பதினான்கரை வயது பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். மெட்ரிக். ஆங்கிலோ இந்தியப் பாடத் திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள் தற்போதுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படுவதால் அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே செய்முறைத் தேர்வு உள்பட அனைத்துப் பாடங்களிலும் மீள தேர்வெழுத விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். 
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு மையங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலர் அலுவலகங்களிலும் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வுக் கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.125 உடன் கூடுதலாக ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50-ஐ சேர்த்து மொத்தம் ரூ.175 ஐ அரசுத் தேர்வு சேவை மையத்தில் செலுத்த வேண்டும். 
தேர்வு மையம்: தனித்தேர்வர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வெழுதிட அனுமதிக்கப்படுவர். 
தேர்வு அட்டவணை
செப்.24- திங்கள்கிழமை தமிழ் முதல் தாள்
செப். 25 செவ்வாய்க்கிழமை தமிழ் இரண்டாம் தாள்
செப். 26 புதன்கிழமை ஆங்கிலம் முதல் தாள்
செப். 27 வியாழக்கிழமை ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப். 28 வெள்ளிக்கிழமை கணிதம்
செப். 29 சனிக்கிழமை அறிவியல்
அக். 1 திங்கள்கிழமை சமூக அறிவியல்
அக். 3 புதன்கிழமை விருப்ப மொழிப் பாடம்

Share this