ஆகஸ்ட் 31க்குப் பிறகு 3
மாதத்தில்உள்ளாட்சித் தேர்லுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு கட்டங்களாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்தத் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை எனக் கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த 2016-இல் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து, 2016 டிசம்பருக்குள் புதிய அறிவிப்பாணையை வெளியிட முன்பு உத்தரவிட்டிருந்தது.
காலக்கெடு நிர்ணயம் செய்யக் கோரி... இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் பாடம் ஏ.நாராயணன் ஆகியோரும், உள்ளாட்சி அமைப்புகளின் துணைத் தலைவர் பதவிகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்குரைஞர் மு.பழனிமுத்து உள்ளிட்டோரும் தனித் தனியாக வழக்குத் தொடர்ந்தனர்.
கெடு விதித்தும்கூட...இந்த வழக்குகளை கடந்த ஆண்டு விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை 2017 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் கெடு விதித்து உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஆனால், மாநில தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பாணையையும் வெளியிடவில்லை. இதனையடுத்து திமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெஃரோஸ்கான் மற்றும் மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது அதிகாரிகள் இருவரும் ஆஜராகி ஏற்கெனவே விளக்கம் அளித்தனர். இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு: இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள், தேர்தல் நடத்த எந்தத் தடையையும் நீதிமன்றம் விதிக்கவில்லையே, இந்த வழக்கில் ஜூலை 31-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என அறிவித்திருந்தும், மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் யாரும் ஆஜராகாதது ஏன்'' எனக் கேள்வி எழுப்பினர்.
தேர்தலை நடத்த முடியாதது ஏன்? அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நெடுஞ்செழியன், வார்டு மறுவரையறை செய்யும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை, அந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர்தான் தேர்தலை நடத்த முடியும் எனத் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்க மறுப்பு: இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இதே காரணத்தைத்தான் கூறி வருகிறீர்கள். எனவே, கடந்த முறை இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சோமையாஜி மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்; இந்த வழக்குக்காக மீண்டும் மீண்டும் இந்த அமர்வு கூட முடியாது எனத் தெரிவித்தனர்.
சிறைக்கு அனுப்ப வேண்டும்: இதனையடுத்து வழக்குரைஞர் நெடுஞ்செழியன் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அவமதித்த குற்றத்துக்காக மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளை தலைமை நீதிபதி நேரடியாக சிறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
எச்சரிக்கை: இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தலுக்கான கால அட்டவணையை நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 6) தாக்கல் செய்ய வேண்டும். அட்டவணையைத் தாக்கல் செய்யத் தவறும் நிலையில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சந்திக்க நேரிடும் என எச்சரித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.
இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வார்டுகளை மறுவரையறை செய்து ஆகஸ்ட் 31ஆம் தேதி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஆகஸ்ட் 31க்குப் பிறகு 3 மாதத்தில் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...