இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் 5G
அறிமுகமாகிவிடும் எனச் சொல்கிறது அரசு; அது சாத்தியமானால் 2022-க்குள் நம் எல்லோர் கையிலும் 5G இருப்பது நிச்சயம். தற்போது இருப்பதை விடவும் அதிவேக இணையம், கிராமப்புறங்களில்கூட தரமான வாய்ஸ் குவாலிட்டி, மெஷின் டு மெஷின் இடையேயான அதிவேகத் தகவல் பரிமாற்றம் என நம் தகவல்தொடர்பு முறையை நிச்சயம் 5G அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லும். ஆனால், அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாக 5G-யைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது அவ்வளவு சுலபமில்லை. அரசுக்கும், டெலிகாம் நிறுவனங்களுக்கும் இடையேயே தற்போது நிறைய முட்டல் மோதல்கள் நடந்துவருகின்றன; தற்போதைய 4G சந்தையிலேயே இன்னும் கடும்போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. டெலிகாம் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இப்படியிருக்கையில் எப்படி 2020-க்குள் 5G-யை கொண்டுவரப்போகிறது மத்திய அரசு? தற்போது தொலைத்தொடர்புத் துறையில் இருக்கும் முக்கியமான சவால்கள் என்ன?
தரநிர்ணயம்
2G, 3G,4G என எதுவாக இருந்தாலும் அவை எப்படி இருக்கவேண்டும் என்பதைச் சர்வதேச அமைப்புகள்தான் முடிவுசெய்யும். அப்படி 5G-க்கான தரத்தை 3GPP எனும் அமைப்பே நிர்ணயம் செய்யும். அதன்பிறகே தொழில்நுட்ப நிறுவனங்கள் அதனைப் பின்பற்றும். தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 4G-யின் தரநிர்ணயமானது 2008-ம் ஆண்டு இறுதிசெய்யப்பட்டது. பின்னர் முதன்முதலாக ஸ்வீடனில் 4G அறிமுகமானது; அதன்பின்பு 2012-ல் 4G இந்தியாவிற்கு வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக நாம் காணும் 4G-யின் வளர்ச்சி இப்படித்தான் தொடங்கியது. இதேபோலத்தான் 5G-யும் இந்தியாவுக்கு வரும்.
5G-க்கான முதல்கட்ட தர்நிர்ணயமானது இந்த ஆண்டு ஜூன் மாதம்தான் இறுதிசெய்யப்பட்டு வெளியானது. இனி இந்த தரத்தில் செயல்படவேண்டிய கருவிகளை உற்பத்தி செய்யவேண்டியது நிறுவனங்களின் பொறுப்பு. இதுதவிர இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னொரு கடமையும் உண்டு. அது, இந்தியாவிற்கேற்றபடி 5G நெட்வொர்க்கை அமைப்பது; உதாரணமாக, கிராமப்புறங்களில் குறைவான நபர்களே இருப்பார்கள்; எனவே அவர்களுக்காகக் குறைவான டவர்களே வைப்பார்கள். இதனால் அங்கே கால் குவாலிட்டியில் தரம் குறைவாக இருக்கும். இதுதான் தற்போதைய நிலை. ஆனால், 5G நெட்வொர்க்கில் இது இருக்கக்கூடாது என்பதும் ஒரு விதி. இதனை இந்திய விஞ்ஞானிகள் 3GPP-யிடம் பரிந்துரைத்து, அதனை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, இந்தியாவில் 5G நெட்வொர்க்கை அமைக்கும் நிறுவனங்கள், கிராமப்புறங்களிலும் தரமான சேவை கிடைக்க வழிவகை செய்யவேண்டும். இந்த விதிக்கு டெக்னிக்கலாக Low Mobility High Coverage எனப்பெயர். இப்படி 5G தரத்திற்கான தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்கவேண்டியது முதல் சவால்.
5G அலைக்கற்றைகள்
மற்ற விஷயங்களை விடவும் அரசின் பங்கு அதிகம் இருப்பது இந்த அலைக்கற்றை விஷயத்தில்தான். 5G நெட்வொர்க்கிற்கான பணிகளை டெலிகாம் நிறுவனங்கள் தொடங்க வேண்டுமென்றால், முதல் பணியே அலைக்கற்றைகளுக்கான உரிமம் பெறுவதுதான். ஆனால், இந்த விஷயத்தில் டெலிகாம் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே வர்த்தக ரீதியிலான சிக்கல்கள் எழுந்துள்ளன. இரண்டு வருடமாக ஜியோவானது டெலிகாம் துறையில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, பிறடெலிகாம் நிறுவனங்களின் வருவாய் பலத்த அடி வாங்கியுள்ளது. 4G சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்காக இன்னும் அதிகளவில் முதலீடு செய்தும் வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 5G-க்கான முதலீட்டையும் மேற்கொள்ள வேண்டும் என்பது டெலிகாம் நிறுவனங்களுக்குச் சவாலான காரியம். எனவே 5G அலைக்கற்றைகளின் விலை ஓரளவுக்கேனும் கட்டுபடியாகும் அளவில் இருந்தால்தான் அவர்களும் லாபமீட்ட முடியும். ஆனால், தற்போது அரசு நிர்ணயித்துள்ள அலைக்கற்றை கட்டணம் மிகவும் அதிகம் எனக் குற்றம் சாட்டுகின்றன இந்நிறுவனங்கள். சீனாவில் 5G அலைக்கற்றைகளுக்கான கட்டணத்தோடு ஒப்பிட்டால் இங்கே 10 மடங்கு அதிகம் என்கின்றனர் அவர்கள்.
அலைக்கற்றையை அதிக விலை வைத்து விற்பதன்மூலம், அரசு நல்ல வருவாய் பார்க்கமுடியும் என்பது உண்மைதான். ஆனால், டெலிகாம் துறையில் அசாதரணமான சூழ்நிலை நிலவும் இந்தச் சமயத்தில் அரசுதான் நிச்சயம் கைகொடுக்கவேண்டும் என்று டெலிகாம் துறை. இந்த விஷயத்தில் அரசு எவ்வளவு விரைவில் முடிவெடுக்கிறதோ, அதைப் பொறுத்தே 5G-க்கான பணிகளும் வேகமெடுக்கும்.
தொழில்நுட்பம்
தற்போது நாம் பயன்படுத்தும் 4G-யை விடவும், 5G 100 மடங்கு வேகம் அதிகமாக இருக்கும். இப்போது இருக்கும் 4G-யே போதுமான அளவு வேகமாக இருக்கும்போது, நமக்கு எதற்கு 5G எனத் தோன்றலாம். ஆனால், இவ்வளவு வேகம் எதிர்காலத்தில் நிச்சயம் நமக்கு தேவைப்படும் என்பதுதான் டெலிகாம் கணக்கு. தற்போது இருக்கும் 4G வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க அதன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிக்கப்படும். அதுவும் இந்தியா போன்ற மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது நிச்சயம் நடக்கும் என்கின்றனர் நிபுணர்கள்; மேலும், எதிர்காலத்தில் நாம் பயன்படுத்தப்போகும் விர்ச்சுவல் ரியாலிட்டி, மெஷின் டு மெஷின் போன்ற தொழில்நுட்பங்கள் அனைத்திற்கும் அதிவேக இணையம் நிச்சயம் அவசியம்; கேட்ஜெட்களின் எண்ணிக்கையும், வாடிக்கையாளர்களின் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். இவற்றையெல்லாம் சமாளிப்பதற்கு ஒரேவழி 5G-தான். தற்போது இருக்கும் 4G-யானது 20 MHz அலைக்கற்றைக்குள் இயங்குபவை. ஆனால், 5G-யானது 100 MHz வரை இயங்கக்கூடியவை. 4G-யை விடவும் 5 மடங்கு இவை திறன்மிகுந்தவை. எனவே, அவற்றால் மட்டுமே நம் எதிர்கால இணையத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும்.
இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை நாடு முழுவதிலும் ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் நம்மால் முழுமையான 5G அனுபவத்தைப் பெறமுடியும். இதற்கான சாத்தியங்கள், முதலீடு என இதிலும் சவால்கள் இருக்கின்றன.
மொபைல் போன்கள்
புதிதாக 5G நெட்வொர்க் இருந்தால் மட்டும் போதுமா? அவற்றை உள்வாங்கிக்கொள்ளும் மொபைல் போன்கள் வேண்டாமா? அதுதான் அடுத்த சவால். இன்று இருக்கும் 4G போன்கள் எதுவுமே 5G-யை சப்போர்ட் செய்யாது. 4G வந்தபோது 3G-யின் நிலையும் இப்படித்தான் இருந்தது. ஆனால், 4G-க்கு நடந்த ஒரே நல்லவிஷயம், 2012-18-க்கு இடைப்பட்ட காலத்தில் அதிவேகமாக வளர்ந்த மொபைல் சந்தை. பட்ஜெட் மொபைல்களே இந்தியாவில் 4G வசதியோடு வர, மிக எளிதாக 4G-யின் பயன்பாடு அதிகரித்தது. இதே அதிர்ஷ்டம் 5G-க்கும் இருக்கும் எனச் சொல்லமுடியாது. ஹூவாவே, நோக்கியா, சாம்சங், ஆப்பிள் உள்பட இப்போதே பல மொபைல் போன் உற்பத்தியாளர்களும் 5G-க்கு ஏற்ப தயாராகி வருகின்றனர். இந்த வேகம் இன்னும் அதிகரிக்க வேண்டுமென்றால், மொபைலின் எலெக்ட்ரானிக் பாகங்களை உற்பத்தி செய்யும் எல்லா நிறுவனங்களுமே முனைப்பு காட்டவேண்டும். சமீபத்தில்தான் மொபைல் சிப் நிறுவனமான குவால்காம் 5G-க்கான சிப்பை வெளியிட்டது. இதேபோல பிறநிறுவனங்களும் அப்டேட் ஆகவேண்டும். அப்போதுதான் 5G சந்தை சீராக வளர்ச்சியடையும். இல்லையெனில் டெலிகாம் நிறுவனங்களுக்கு ஆரம்பத்தில் தள்ளாடவே செய்யும்.
வாடிக்கையாளர்கள்
டெலிகாம் நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்வதால் நிச்சயம் 5G தொடக்கத்தில் விலை அதிகமாகவே இருக்கும். அதற்கேற்ற மொபைல்களும் உடனே தயாராகிவிடாது; எனவே ஜியோ வருவதற்கு முன்புவரைக்கும், 4G எப்படி எலைட்டான சர்வீஸாக மட்டுமே பார்க்கப்பட்டதோ, அதேபோலத்தான் 5G-யும் பார்க்கப்படும். ஜியோ போல 5G-க்காக புதிய டிஸ்ரப்டர் வரவும் வாய்ப்பில்லை. ஈனவே, இந்தப் பிரச்னையை தற்போது களத்தில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள் எப்படி கையாளப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இதுதவிர டெலிகாம் நிறுவனங்களுக்கு 5G மூலம் இன்னொரு நன்மையையும் உண்டு . அது வெவ்வேறு துறைசார்ந்த வாடிக்கையாளர்கள். 4G-யைப் பொறுத்தவரை தனிநபர்கள் மட்டும்தான் முதன்மை வாடிக்கையாளர்கள். ஆனால், 5G அப்படியல்ல; மருத்துவம், விவசாயம், உற்பத்தி தொழிற்சாலைகள் என இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் 5G-யின் தேவை இருக்கும். இது டெலிகாம் நிறுவனங்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இப்படி நிறைய பிரச்னைகளும், நன்மைகளும் கலந்துதான் நமக்கான 5G உருவாகிக்கொண்டிருக்கிறது. எல்லா தொழில்நுட்பங்களும் இப்படியொரு காலகட்டத்தைக் கடந்து வந்துதான், இன்று நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கின்றன. 5G-க்கும் அது பொருந்தும்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...