இன்ஜி., துணை கவுன்சிலிங் : சுயமாக இடம் தேர்வு செய்ய அறிவுறுத்தல்

சென்னை: இன்ஜினியரிங் கல்லுாரி காலியிடங்களை நிரப்புவதற்கான, துணை கவுன்சிலிங் நேற்று துவங்கியது. இதில், இடைத்தரகர் தலையீடு இன்றி, இடம் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
98 ஆயிரம் காலியிடங்கள் : அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, சிறப்பு மற்றும் பி.ஆர்க்., பிரிவினருக்கு, நேரடியாக ஒற்றை சாளர கவுன்சிலிங் நடந்தது. பொது பிரிவு மாணவர்களுக்கு, ஆன்லைன் முறையிலான கவுன்சிலிங், ஆக., 20ல் முடிந்தது.கவுன்சிலிங் முடிவில், இந்தாண்டு இன்ஜி., படிப்புக்கு, 72 ஆயிரம் பேர் சேர்ந்தனர்; 98 ஆயிரம்இடங்கள் காலியாக உள்ளன.இந்நிலையில், பிளஸ் 2 துணை தேர்வு எழுதியோர் மற்றும் கலை கல்லுாரிகளில் சேர்ந்து, மீண்டும் இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்புவோருக்கு, துணை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. சென்னையில் உள்ள, அண்ணா பல்கலை வளாகத்தில், நேற்று துணை கவுன்சிலிங் துவங்கியது. இதில், மாணவர்கள் நேரடியாக பங்கேற்று, இடங்களை தேர்வு செய்யலாம்.துணை கவுன்சிலிங்கில்,பொது பாடப்பிரிவுமாணவர்களுக்கு இன்றுடனும், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, நாளையுடனும் கவுன்சிலிங் முடிகிறது.அருந்ததியர் பிரிவினருக்கான காலி இடங்களை, ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஒதுக்குவதற்கான கவுன்சிலிங், நாளை மறுநாள் நடத்தப்படுகிறது. அத்துடன், இன்ஜி., கவுன்சிலிங் நடவடிக்கைகள் முடிவுக்கு வருகின்றன.
அறிவுரை : இதற்கிடையில், அண்ணா பல்கலையின், மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்ட அறிவிப்பு:துணை கவுன்சிலிங்கில், கல்லுாரிகளின் காலியிடங்களை, மாணவர்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செய்யலாம். இடைதரகர்கள், தனியார் கல்லுாரிகளின் குறுக்கீடு இன்றி, இடங்கள் ஒதுக்கீடு பெற முடியும். இடைதரகர்கள் குறுக்கிட்டால், மாணவர்கள் புகார் செய்யலாம். அவர்கள் மீது, போலீஸ் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share this