வெப்பச்சலனம் காரணமாக வடதமிழகம் முதல்
தென் தமிழக கடற்கரை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.கடந்த ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் மீண்டும் மழை தொடங்க இருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப்ஜான் தனது முகநூலில் பதிவிட்டு இருப்பதாவது: வெப்பச்சலனம் காரணமாக வட மற்றும் தென் தமிழகக் கடலோர பகுதிகள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று இரவு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு மழை இருக்கும். சேலம், அதன் அருகே இருக்கும் பகுதிகளில் கூட மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இந்த அனைத்து மாவட்டங்களிலும் அனைத்துப் பகுதிகளிலும் மழை இருக்காது, மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே மழை இருக்கும். கேரளாவில் பருவமழை சிலநாட்கள் பெய்யாமல் இடைவெளி விட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கு மழை பெய்ய சரியான வாய்ப்பாகும். குறிப்பாகத் தமிழகத்தின் உள்மாவட்டங்கள், கிழக்குப்பகுதி மாவட்டங்களில் மழை இருக்கும். கர்நாடகாவில் பெங்களூரிலும் இந்தக் காலகட்டத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் இந்த மாதம் இறுதிவரை அடிக்கடி மழை பெய்வதற்கான சூழல் சாதகமாக இருக்கிறது இவ்வாறு பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...