பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டுப் புத்தகங்களில் அரசியல் தலைவர்கள் அல்லது சினிமா பிரபலங்களின் படங்களைத்தான் அச்சடித்து விநியோகிப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், கரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படிக்கும், உடல் வளர்ச்சி குறைபாடுடைய மாணவியின் புகைப்படத்தை அச்சடித்து நெகிழவைத்துள்ளார்கள்.
இதற்காக, எட்டரை லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. கரூர், கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 46 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது, அ.வெங்கடாபுரம். இந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார், ஜெயபெனடிக்டா. இவரின் பெற்றோர், ஆரோக்கியசாமி மற்றும் ஓசன்னமேரி. மரபுவழி குறைபாடு காரணமாக, வளர்ச்சி குறைபாடுடைய குழந்தையாக இருக்கிறார் ஜெயபெனடிக்டா. ஆனாலும், படிப்பில் படுசுட்டி. கடந்த வருடம், கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், டெங்கு ஒழிப்பு பிரசாரத்துக்காக ஊராட்சிகள் தோறும் கடைபிடிக்கப்பட்ட உறுதிமொழியை, ஜெயபெனடிக்டா மனப்பாடமாக ஒப்பித்தார். அந்த வீடியோவை தலைமை ஆசிரியர் ஷாகுல் ஹமீது நண்பர், முகநூலில் பதிவிட்டார். அது 6 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி வைரலானது. இதனால், அப்போதைய கலெக்டர் கோவிந்தராஜ், `சுகாதாரத் தூதுவராக' ஜெனபடிக்டாவை அறிவித்தார். குடியரசு தினத்தன்று இவரை அழைத்து கௌரவித்ததோடு, அந்த உறுதிமொழியைச் சொல்லவைத்து, எல்லோருக்கும் விழிப்புஉணர்வை ஏற்படுத்தினார்.
இந்தச் செய்தியைப் பத்திரிகைகளில் படித்த கோவையைச் சேர்ந்த `பசியாற சோறு' அமைப்பின் ராஜேசேது முரளி, அ.வெங்கடாபுரத்துக்கு வந்து ஜெயபெனடிக்டாவைச் சந்தித்தார். மாணவியின் புகைப்படத்தை 500 புத்தகப்பைகள் மற்றும் 4,500 நோட்டுப் புத்தகங்களில் அச்சடித்து, மாணவர்களுக்கு விநியோகித்துள்ளார். `எளிய மாணாக்கர்களுக்கான தாய்மை விழா' என்று அந்த நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்தது. இதுபற்றி, தலைமை ஆசிரியர் ஷாகுல் ஹமீதுவிடம் பேசினோம்.,
ஜெயபெனடிக்டா அ.வெங்கடாபுரத்தையும், எங்கள் அரசுப் பள்ளியையும் உலகறியச் செய்துவிட்டாள். இவளைப் பற்றிய செய்தியைப் பார்த்துட்டு ராஜாசேது முரளி எங்கள் பள்ளிக்கு தனது ஆட்டோவிலேயே நான்கு முறை வந்துசென்றார். `உறவுக்குள் திருமணம் செய்தால், இப்படி வளர்ச்சிக் குறைபாடுடைய குழந்தை பிறக்கும் என்பதை உணர்த்துவதற்கும், இந்தக் குழந்தைக்குச் சுகாதாரத்தின் மீதுள்ள ஆர்வத்தை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புஉணர்வு ஏற்படுத்தவும் விரும்பினார். ஜெனபடிக்டா புகைப்படத்தைப் புத்தகப்பைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்களில் அச்சடித்து அளித்தார். புகைப்படம் மட்டுமன்றி, சுகாதார உறுதிமொழி வாசகங்களையும் அச்சடித்தார். அந்தப் புத்தகப்பை, நோட்டுகளுடன் பேனா, பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ், யூனிஃபார்ம் ஒரு செட் என 16 வகை பொருள்களையும் சேர்த்துக் கொடுத்தார். எங்கள் பள்ளி மாணவர்கள் 50 பேருக்குக் கொடுக்கப்பட்டது
மற்றவை, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 44 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஜெயபென்டிக்டாவின் திறமையும், அவள் வலியுறுத்தும் சுகாதார விழிப்புஉணர்வும் பல பள்ளி மாணவர்களுக்குச் சென்று சேர்ந்திருக்கிறது. ஜெயபெனடிக்டாவுக்கு எங்கள் செலவில் மருத்துவமும் பார்த்திருக்கிறோம். வெறும் ஆறரை சதவிகிதமாக இருந்த அவளது ஹீமோகுளோபின் அளவு, 10 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்தக் கிராமமே முன்பு சுகாதாரமின்றி இருந்தது. ஜெயபெனடிக்டாவின் செயல்பாடுகளுக்குப் பிறகு, ஒவ்வொருவரும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஊரை சுத்தமாக வெச்சிருக்காங்க" என்றார் பெருமிதமாக.
பசியாறு சோறு' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜாசேது முரளி, ``நான் ஆட்டோ ஓட்டும் சாதாரண ஆள். சின்ன வயசில் நல்லா படிக்க நினைச்சேன். என் அம்மாவால் 9-ம் வகுப்புக்கு மேலே படிக்கவைக்க முடியலை. அந்த வலி மனசில் இருந்துச்சு. அதனால், `என்னைப்போல யாரும் பாதியில் பள்ளிப்படிப்பை நிறுத்தக் கூடாது என நினைச்சேன். 1992-ம் ஆண்டிலிருந்து இப்படி அரசுப் பள்ளி ஏழை மாணவர்களுக்கு அந்த வருடத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறேன். 2008-க்குப் பிறகு பெரிய அளவில் செய்ய ஆரம்பித்தோம். இதற்காக, ஆட்டோவில் இரண்டு உண்டியல் வைத்துள்ளேன். எனக்கு உதவுபவர்கள் எல்லோருமே வசதியானவர்கள் அல்ல. சாக்கடை அள்ளும் துப்புரவுத் தொழிலாளி, தினமும் 30 கிலோமீட்டர் சைக்கிள் மிதிச்சு ஜவுளி வியாபாரம் பார்க்கும் முதியவர் என எளிய மனிதர்கள்தாம். வருடம் முழுக்க சேமிக்கும் பணத்தில்தான் இது நடக்கிறது. நன்றாகப் படித்தாலும், ஏழ்மை காரணமாக நின்றுவிடும் சூழ்நிலையில் இருக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து உதவுகிறோம். ஜெயபெனடிக்டா நிலைமையைப் பார்த்ததும், என் கண்கள் ஈரமாயிட்டு. அவள் தெய்வக் குழந்தை. ஊரை, வீட்டைச் சுகாதார குறைபாடாக வைத்திருப்பவர்களுக்கும், உறவுக்குள்ளேயே திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கும் விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில், ஜெனபடிக்டா போட்டோவை அச்சிட்டு வழங்கினேன். என்னைக் கேட்டால், உலகச் சுகாதார நிறுவனத்தின் சுகாதாரத் தூதுவராக ஜெயபெனடிக்டாவை அறிவிக்கலாம்" என்று நெகிழ்கிறார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...