பல்கலைக்கழகத் தேர்வு
முறைகேடுகளைத் தடுப்பதற்காக, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே நடைமுறையை அறிமுகப்படுத்த தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இப்புதிய நடைமுறை மூலம் ஒரு மாணவருடைய விடைத்தாள் எந்த மையத்துக்குச் சென்றுள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதோடு, பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட ஒருசில அதிகாரிகளுக்கு மட்டுமே இதைக் கையாளும் அதிகாரம் கொடுக்கப்படும் என்பதால் முறைகேடு நடைபெற வாய்ப்பிருக்காது என்கின்றனர் உயர் கல்வித் துறை அதிகாரிகள்.
விடைத்தாள் முறைகேடு காரணமாக... அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீடு முறைகேடு மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதோடு, அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதான நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. உண்மையில் தேர்ச்சியடையக் கூடிய மாணவர்களை தோல்வியடையச் செய்திருப்பதும், தகுதியில்லாத மாணவர்களை தேர்ச்சியடையச் செய்திருப்பதும் கல்வியாளர்கள், பெற்றோர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்வு நடைமுறையில் அதிரடி மாற்றம் கொண்டுவர உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள்: இப்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு தேர்வு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் தேர்வுத் தாளில் மறைமுக எண் (டம்மி' எண்) போடப்படும். அதாவது, தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறும் இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுத் தாள்கள், நேரடியாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு ஒவ்வொரு மாணவரின் தேர்வுத் தாளுக்கும் டம்மி' எண் போடப்பட்டு, தேர்வுத் தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த நடைமுறையில், ஒரு மாணவர் எளிதில் தனது விடைத்தாளைக் கண்டுபிடித்து முறைகேட்டில் ஈடுபட்டுவிட முடியும் என்பது, அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நடைமுறையை மாற்ற தமிழக உயர் கல்வித் துறை இப்போது முடிவு செய்துள்ளது.
பார் கோட்' நடைமுறை: அதாவது, விடைத்தாள்களில் பார் கோட்' நடைமுறையை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, ஒவ்வொரு மாணவருடைய விடைத்தாளின் முதல் பக்கம் பல்கலைக்கழகத்திலேயே வைத்துக்கொள்ளப்பட்டு, விடைகள் இடம்பெற்றிருக்கும் மற்ற பக்கங்கள் மட்டும் சிறப்புக் குறியீடு இடப்பட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.
முறைகேட்டுக்கு வாய்ப்பிருக்காது: இச்சிறப்புக் குறியீடு இடும் அதிகாரம் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உள்பட ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதால், முறைகேடு நடைபெற்றால் அவர்கள் மட்டுமே பொறுப்பேற்கவேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படும். மேலும், பருவத் தேர்வில் மட்டுமின்றி, விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் விண்ணப்பித்தலின்போதும் இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்படும். எனவே, புதிய நடைமுறை மூலம் முறைகேட்டுக்கு வாய்ப்பிருக்காது என்கின்றனர் கல்வியாளர்கள்.
இது குறித்து உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கூறியது: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீடு முறைகேடு போன்று வரும் காலங்களில் முறைகேடுகள் நடைபெறாத வகையில், புதிய தேர்வு நடைமுறையை அறிமுகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது விடைத்தாளில் பார் கோடு' போன்ற ரகசியக் குறியீடு இடம்பெறச் செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் நடைமுறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
குழு அமைக்கப்படும்: இதற்காக உயர் கல்வித் துறை இணைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக பரீட்சார்த்த முறையில் சிறிய அளவில் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அறிமுகம் செய்யப்படும்.
இப்போது, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு விதமான தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற்றப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...