விடைத்தாள் திருத்துவதில் புதிய முறை: சில மணி நேரங்களில் வெளியான தேர்வு முடிவுகள்!

விடைத்தாள் திருத்துவதில் புதிய முறையைப்
பின்பற்றுவதால், மாணவர்கள் தேர்வெழுதிய
சில மணி நேரங்களிலேயே தேர்வு முடிவுகளை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
  மருத்துவப் பல்கலைக்கழகத்தின் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம். மற்றும் எம்.சிஹெச். ஆகியவற்றுக்கான இறுதித் தேர்வு அண்மையில் நடைபெற்றது.
  217 மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். அவர்களின் விடைத்தாள்கள் ஆன் ஸ்கிரீன் இவால்யூஷன் என்ற முறையைப் பின்பற்றி திருத்தப்பட்டுள்ளன.
   அதன்படி, மாணவர்களின் விடைகளுக்கான குறியீடுகள் தயாரிக்கப்பட்டு, படங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு அவற்றின் உதவியுடன் கணினியில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன.
  இதுதொடர்பாக,இப்பல்கலைக்கழக தேர்வுத் துறை உயரதிகாரி கூறியது.
  ஆன் ஸ்க்ரீன் இவால்யூஷன்' மூலம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டதால் அவற்றில் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை.
   எனவே, மறுமதிப்பீடு, மறுகூட்டல் போன்ற நடைமுறைகள் தேவையில்லை. கேள்வித்தாள்களுக்கு போலியான எண்கள் கொடுக்கப்பட்டதால், விடைத்தாள்களைக் கண்டறிந்து முறைகேட்டில் ஈடுபடவும் வாய்ப்பு இல்லை.
  ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வரும் முறையின் மூலம் விடைத்தாள்கள் திருத்தும்பட்சத்தில் முடிவுகளை வெளியிடுவதற்கு 10 அல்லது 20 நாள்களாகும்.
  இந்தப் புதிய முறையின் மூலம் தேர்வெழுதிய அதே நாளில் சில மணி நேரங்களிலேயே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
   இதனால், மாணவர்கள் வேலைக்கு அல்லது உயர் கல்விக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையற்ற தாமதம் ஏற்படாது.
  2017 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தப் புதிய முறை சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டது.
   தற்போது இம்முறையைப் பின்பற்றி எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., செவிலியர் படிப்பு, மருந்தியல் படிப்பு உள்ளிட்டவற்றுக்கான தேர்வு விடைத்தாள்களும் திருத்தப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
நன்றி :தினமணி நாளிதழ்

Share this

0 Comment to "விடைத்தாள் திருத்துவதில் புதிய முறை: சில மணி நேரங்களில் வெளியான தேர்வு முடிவுகள்!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...