சனிக்கிழமை வேலை நாள் : பெயரளவிற்கு இயங்கிய பள்ளிகள்

மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் இயங்கும்
என்ற அறிவிப்பு, நேற்று முன்தினம் தாமதமாக அறிவிக்கப்பட்டதால் அனைத்து பள்ளிகளும் மிகக்குறைந்த மாணவர்களுடன் இயங்கின.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு கல்வித்துறை நாட்காட்டி அடிப்படையில் நேற்று சனிக்கிழமை விடுமுறை தினமாகும்.
இருப்பினும் வேலை நாட்களில் வேறு காரணங்களுக்காக அரசு விடுமுறை அறிவித்திருந்ததால் அதை சமன் செய்ய நேற்று பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு நேற்று முன்தினம் மாலை 4.15 மணிக்கு தலைமையாசிரியர்களுக்கு வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்தியாக வந்தது.கல்வித்துறையில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் தகவல் அனுப்பும் வசதி இல்லை. இதனால் மாலை 4.10 மணிக்கு கல்வித்துறை சார்பில் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல்அனுப்பப்பட்டு அதன்பிறகு சில நிமிடங்களில் நிர்வாகிகள் மூலம் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் 4.10 மணிக்கு பள்ளி முடிந்து மாணவர்கள் வெளியேறி விட்டனர். இதனால் நேற்று பள்ளி இயங்கும் என மாணவர்களுக்கு தெரியப்படுத்த முடியவில்லை.நேற்று முழு நேரம் பள்ளிகள் இயங்கிய நிலையில் சுமார் 25 சதவீத மாணவ, மாணவிகள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தனர்.
இதனால் பள்ளிகள் இயங்கியும் பயனில்லாமல் போனது.தலைமையாசிரியர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று விடுமுறை. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி இயங்கும் என அறிவித்தனர். எத்தனை மணிக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற நடைமுறையைக் கூட பின்பற்றாமல் சம்பிரதாயத்திற்கு அறிவிப்பை வெளியிடுகின்றனர். கல்வித்துறையில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாக செய்தியை அனுப்பக்கூடவசதி இல்லாத நிலையில் முன்கூட்டியே செய்தியை அனுப்ப வேண்டும் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லை. நேற்று பள்ளிகள் பெயரளவிற்கு வேலை நாள் கணக்கு காட்ட மட்டுமே திறந்திருந்தன. மாணவர்கள் வரவில்லை என்றனர்.

Share this