மருத்துவக் காப்பீடில் மனநல சிகிச்சையும் சேரும்!

மருத்துவக் காப்பீடில் மனநல சிகிச்சையும் சேரும்!
காப்பீட்டு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் காப்பீட்டுத் துறை கட்டுப்பாடு
மற்றும் மேம்பாட்டு ஆணையமானது, சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில் மனநலப் பிரச்சினைகளையும் காப்பீட்டுத் திட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. காப்பீட்டு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் காப்பீட்டுத் துறை கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Inusurance Regulatory and Development Authority) சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றைக் காப்பீடு அளிப்பவர்களுக்கு அனுப்பியது. அதில், மருத்துவக் காப்பீட்டைப் பொறுத்தவரை உடல்நலக் கோளாறுகளைப் போலவே மனநலப் பிரச்சினைகளையும் கருத வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது மனநலப் பிரச்சினைகள் மருத்துவக் காப்பீடில் இடம்பெறவில்லை. ஆனால் உலகம் முழுக்க இருக்கும் நிறுவனங்கள் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. சுமார் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் மனநலப் பிரச்சினைகள் தொடர்ந்தால், அதனை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து அமல்படுத்தி வருகின்றன.
2017ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட மனநலச் சட்டம், கடந்த மே 29ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. “இந்தச் சட்டத்தில் பிரிவு 21 (4)ன் படி, ஒவ்வொரு காப்பீடு நிறுவனமும் மருத்துவக் காப்பீட்டில் உடல்நலப் பிரச்சினைகளைப் போலவே மனநலக் கோளாறுகளையும் கருத வேண்டும்” என்று தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது காப்பீட்டுத் துறை கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையம்.
“இதனால் மனநலப் பிரச்சினைகளால் அவதியுறுபவர்களின் வாழ்க்கைக்கான கண்ணியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக, மற்ற நோய்களைப் போல மனநலப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு உண்டாகும். அதனை ஏற்கும் மனநிலை மக்கள் மத்தியில் அதிகமாகும்” என்று தெரிவித்துள்ளார் டிடிகே குழுமத்திலுள்ள சிக்னா காப்பீட்டு நிறுவனத்தின் சிஓஓ ஜோதி புஞ்சா.
மனநலக் கோளாறுகளின் தாக்குதலை அளவீடு செய்வது பற்றிய முறையான வரையறை இல்லாத நிலையில், இதுபற்றிய விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this