தகவலைப் பெற பணம்: நகராட்சி கடிதம்!தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட மனுவுக்கான தகவல்களை அளிக்க, 43,000 ரூபாய் கேட்டு கடையநல்லூர் நகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள கடையநல்லூர் நகராட்சியில் பல்வேறு திட்டப் பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், கடந்த ஆண்டு நகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலைக் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், கையெழுத்து சரியில்லை என முதலில் பதில் கடிதம் அனுப்பியது நகராட்சி நிர்வாகம். அதன் பின்னர் தீர்மானத்தை வழங்க பணம் கேட்டு மற்றொரு கடிதத்தை அனுப்பியுள்ளது.
மொத்தம் 437 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ஒரு தீர்மானத்திற்கு 100 ரூபாய் வீதம் மொத்தம் 43,700 ரூபாய் பணம் கொடுத்தால் தீர்மானங்களை அனுப்புவதாகவும் அந்தப் பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 7 துணைப் பிரிவு 1இன் கீழ் அச்சிடப்பட்ட தகவல் அளிக்க, ஒவ்வொரு ஏ4 அல்லது ஏ3 தாளுக்கு 2 ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் கூடுதல் கட்டணம் கேட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் பிரமுகர் அப்துல் காதர் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடையநல்லூர் நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் கருத்து வெளியிட்டுள்ளார். ஒரு தீர்மானத்தின் தகவலை வழங்க 100 ரூபாய் கட்டணம் வசூலிப்பது குறித்து நகராட்சிக் கூட்டத்தில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதன் அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share this

0 Comment to "தகவலைப் பெற பணம்: நகராட்சி கடிதம்!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...