ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர்,
ஓய்வு பெற இருந்த நிலையில் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கடந்த சில மாதங்களாக பரபரப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக கல்லூரி பேராசிரியர்கள் தேர்வில் முறைகேடு நடந்ததாக சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் சிலர் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஒரு போட்டித் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் அளித்து கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் ராஜராஜேஸ்வரி நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இயக்குநர் நிலையில் 3 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒருவர் இயக்குநர் உறுப்பினரான ராஜராஜேஸ்வரி. இவர் கடந்த 31ம் தேதி ஓய்வு பெற்றார். அதே நாளில் அவரை சஸ்பெண்ட் செய்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு இயக்குநர் ராஜராஜேஸ்வரி பணியாளர் தொகுப்பின் இணை இயக்குநராக இருந்தபோது அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் நியமனம் செய்வதில் முறைகேடு நடந்ததாக மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அரசியல்வாதிகள் பரிந்துரையின் பேரில் துப்புரவுப்பணியாளர் நியமனம் நடந்துள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதி மன்றம், இந்த வழக்கில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்களா என்று விசாரணை நடத்த வேண்டும் என்று லஞ்சஒழிப்பு துறை இயக்குநருக்கு உத்தரவிட்டது.
அவர்கள் நடத்திய விசாரணையின் போது மேற்கண்ட இயக்குநர் ராஜராஜேஸ்வரியும் அந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். ஆனால், துப்புரவுப் பணியாளர்கள் நியமனங்கள் 65 மாவட்ட கல்வி அதிகாரிகள்தான் செய்துள்ளனர். அப்போது அந்த அதிகாரிகள் சில உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டின் பேரில் நியமனங்கள் செய்துள்ளதாகவும் ஒருபுறம் கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது இயக்குநர் ராஜராஜேஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுவரை அவர் வகித்து வந்த பதவியின் பொறுப்புகள் அனைத்தும் மற்றொரு இயக்குநரான தங்கமாரியிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள விவகாரம் பள்ளிக்கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Enna kodumai sir
ReplyDelete