கஜா புயல் இன்று கரையைக் கடக்கிறது: 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று, கனமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகி தமிழகத்தை
நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் கடலூருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை மாலை கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். கடல் கடும் கொத்தளிப்புடன் காணப்படும். அலைகள் ஒரு மீட்டர் உயரத்துக்கு மேலெழும்பும். கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும். சில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் அபாயம் உள்ள 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பைக் கருதி பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: மத்திய கிழக்கு, அதையொட்டிய மத்திய மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த கஜா புயல் மேற்கு, வடமேற்குத் திசையில் நகர்ந்து மத்திய மேற்கு, அதையொட்டிய மத்தியக் கிழக்கு, தென்கிழக்கு வங்கக் கடலில் நாகப்பட்டினத்திலிருந்து வடகிழக்கே 580 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கே 490 கி.மீ. தொலைவிலும் புதன்கிழமை காலை 11.30 மணி அளவில் நிலைகொண்டிருந்தது. இந்தப் புயல் மணிக்கு 7 கி.மீட்டரில் இருந்து 10 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இப்புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். தொடர்ந்து இது அதிதீவிர புயலாக மாறக் கூடும். பின்னர், இப்புயல் மேற்கு தென்மேற்கில் நகர்ந்து வலுகுறைந்து கடலூருக்கும், ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை மாலை கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றார் பாலச்சந்திரன்.

8 மாவட்டங்களில் மிக பலத்த மழை: கஜா புயல் காரணமாக கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் ஆகிய 8 மாவட்டங்களில் வியாழக்கிழமை 220 மி.மீ. அளவுக்கு பலத்த, மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

தாழ்வான பகுதிகளில் கடல்நீர் புகும் வாய்ப்பு: அத்துடன் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிகளில் குடிசை, ஓட்டு வீடுகள், மின்கம்பங்கள், சாலைகள் சேதமடைய வாய்ப்புள்ளது. கடலையொட்டிய தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் கடல் நீர் புக வாய்ப்புள்ளது. தொடர்ந்து, வெள்ளி, சனிக்கிழமைகளில் (நவ. 16, 17) தமிழகம், புதுச்சேரி, கேரளம், லட்சத்தீவு, தெற்கு கர்நாடகத்தின் ஒருசில பகுதிகளில் பலத்த, மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: இந்தப் புயலால் சென்னைக்கு நேரடி பாதிப்பு எதுவும் இல்லை. எனினும் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் (நவ. 15, 16, 17) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: புயல் காரணமாக அலையின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்பதால் தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் வியாழக்கிழமை வரை செல்ல வேண்டாம். கடலோரத்தில் வசிக்கும் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயில்கள் ரத்து: திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் வியாழக்கிழமை முற்றிலும் ரத்து செய்யப்படுகின்றன. சென்னையில் இருந்து ராமேசுவரம் வரை செல்லும் விரைவு ரயில் மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும். ராமேசுவரத்தில் இருந்து சென்னை, கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள் மானாமதுரையில் இருந்து புறப்படும்.

ராமேசுவரம்-திருப்பதி, ராமேசுவரம்-ஓஹா (குஜராத்) இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள் மதுரையில் இருந்து புறப்படும். ஓஹா (குஜராத்)- ராமேசுவரம் ரயில் மதுரை வரை வெள்ளிக்கிழமை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Source: DINAMANI

Share this

0 Comment to "கஜா புயல் இன்று கரையைக் கடக்கிறது: 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று, கனமழை எச்சரிக்கை"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...