NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குழந்தைகளை வாங்க, போங்க என்று பேசுவதுதான் மரியாதையா? மருத்துவர் விளக்கம்


வீட்டில் மரியாதையாக நடத்தப்படும் குழந்தைகள், தனக்குக் கிடைத்த மரியாதையை அப்படியே வெளியில் மற்றவர்களுக்குத் தர ஆரம்பிக்கும்.''
'உங்கள் குழந்தைகளுக்கு மரியாதைக் கொடுங்கள்' என்று யாராவது உங்களிடம் சொன்னால், உங்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்?  'யெஸ், நான் எங்க பிள்ளைகளை வாங்க, போங்கன்னு மரியாதைக் கொடுத்துத்தான் பேசுவோம்' என்பீர்களா? அல்லது 'பிள்ளைகளுக்கு மரியாதைக் கொடுக்கிறதுன்னா அவங்க முன்னாடி எழுந்து நின்னு பேசணுமா' என்று கேலி செய்வீர்களா? நீங்கள் எந்த வகையைச் சேர்ந்த பெற்றோர் என்றாலும், இந்தக் கட்டுரை உங்களுக்கானதுதான். குழந்தைகளுக்கு  எந்த வகைகளில் எல்லாம் மரியாதை கொடுக்கலாம்; நீங்கள் கொடுக்கும் மரியாதை அவர்களிடம் என்ன மாற்றங்களையெல்லாம் ஏற்படுத்தும் என்பதைப் பற்றி விளக்குகிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி.

''மரியாதைக் கொடுப்பது என்றால், அவர்களை வார்த்தைக்கு வார்த்தை வாங்கப் போங்க என்று மரியாதையாகப் பேசுவது என்று அவசியமில்லை. அவர்களை அழைக்கிற வார்த்தைகளில் மரியாதைப் பண்பு நிறைந்திருந்தாலே போதும். உதாரணத்துக்கு, ஆண் குழந்தை என்றால் 'தம்பி' என்றோ, பெண் குழந்தை என்றால் 'பாப்பா' என்றோ அழைக்கலாம். இவற்றைத் தவிர, குழந்தைகளை மரியாதையாக நடத்துவதில் 3 பாயிண்ட்ஸை ஃபாலோ செய்தாலே போதும்.

குழந்தைகளின் சிறு சிறு பிழைகளுக்கும்கூட கன்னாபின்னாவென்று கத்தாமல், நிதானமாக அவர்களின் தவற்றை எடுத்துச் சொல்லுங்கள். பிள்ளைகளைக் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டாதீர்கள். அதிலும் குறிப்பாக, மற்றவர்களின் முன்னால் அவர்களை அடிப்பதோ, கடுமையான வார்த்தைகளால் திட்டவோ செய்யாதீர்கள். இது முதல் வகை மரியாதை.

இரண்டாவது வகையில், மற்ற உறவுகளைப் பேணும் மூன்று மந்திர வார்த்தைகளான ப்ளீஸ், தேங்க்ஸ், ஸாரியை உங்கள் சொந்த பிள்ளைகளிடமும் பயன்படுத்துங்கள். உங்களுக்கு அவர்களால், ஒரு உதவி ஆக வேண்டுமென்றால், 'கண்ணா, இந்த வேலையைக் கொஞ்சம் செஞ்சு தா ப்ளீஸ்' எனலாம். மகனோ, மகளோ அந்த வேலையைச் செய்து முடித்தால்  மறக்காமல் ' தேங்க்ஸ்டா தங்கம்' என்று சொல்லுங்கள். முதலிரண்டு மந்திர வார்த்தைகளைப் பயன்படுத்துபவர்கள்கூட மூன்றாவது மந்திர வார்த்தையான 'மன்னிப்பை' சொல்லுவதில்லை. குழந்தைகளின் சிறு சிறு தவறுகளுக்குக்கூட கடுமையாக தண்டித்துவிட்டீர்களென்றால், சில மணி நேரம் கழித்தாவது, 'நீங்கள் ஏன் அப்படி நடந்துகொண்டீர்கள்' என்பதற்கான காரணத்தை எடுத்துச் சொல்லி குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டு விடுங்கள்.

மூன்றாவது வகையில், அவர்களின் நல்ல செயல்களை பாராட்டுங்கள். நன்றாகக் கவனியுங்கள். நான் இங்கே, குழந்தைகள் நன்றாகப் படித்தால் பாராட்டுங்கள் என்று சொல்லவில்லை. அவர்களின் நல்ல செயல்களைத்தான் பாராட்டுங்கள் என்று சொல்கிறேன். உதாரணத்துக்கு, மற்றக் குழந்தைகளை அடிக்காமல் இருந்தால், இன்னொரு குழந்தைக்காக தன்னுடைய பொம்மையை விட்டுக் கொடுத்தால், தன் தவற்றை ஒத்துக்கொண்டால்... உடனே அவர்களை சின்னதாகப் பாராட்டி விடுங்கள். ஆஹா, ஓஹோவென்று பாராட்டினால் அது செயற்கையாகி விடும், கவனம்.

மொத்தத்தில் வெறும் வார்த்தைகளால் இல்லாமல், குழந்தைகளின் உணர்வுகளுக்கு மரியாதைக் கொடுங்கள். அதுதான் மரியாதைக் கொடுப்பதில் சரியான முறை'' என்றவர், இதனால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

''வீட்டில் மரியாதையாக நடத்தப்படும் குழந்தைகள், தனக்குக் கிடைத்த மரியாதையை அப்படியே வெளியில் மற்றவர்களுக்குத் தர ஆரம்பிக்கும். இதைப் பார்க்கும் மற்றவர்கள், 'இந்தக் குழந்தை ரொம்ப மரியாதை தெரிஞ்சவன்' என்று சொல்லும்போதும், பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள், 'இந்தப் பொண்ணை மாதிரி எல்லோரும் மரியாதையா நடந்துக்கணும்' என்று சொல்லும்போதும், அவர்களுடைய சுய மதிப்பீடு அவர்கள் அறியாமலேயே அதிகரிக்கும். சுய மதிப்பீடு நல்ல முறையில் இருக்கிற குழந்தைகளி  தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். அவர்களின் வருங்கால வெற்றிகளுக்கு அந்த தன்னம்பிக்கைதானே அடிப்படை. குறைந்தது 3 வயதில் இருந்து, நான் மேலே சொன்னபடி பிள்ளைகளை  மரியாதையாக நடத்தினீர்களென்றால், அது அவர்களின் வாழ்நாள் முழுக்க உதவியாக இருக்கும்'' என்று முடித்தார் சைக்காட்ரிஸ்ட் ஜெயந்தினி.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive