ஒருவழியாக உள்ளாட்சித் தேர்தல்
நடைபெற போகிறது! லோக்சபா தேர்தலில் பயன்படுத்திய வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக்கொண்டு, கோவை மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக, வார்டு வாரியாக பட்டியல் தயாரித்து, ஓட்டுச்சாவடிகளை இறுதி செய்யும் வேலை துவக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், 2016 அக்., 25ல் முடிந்தது. மீண்டும் தேர்தல் நடத்த தயாராகி வந்த நிலையில், இடஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க., தொடர்ந்த வழக்கால் தேர்தலை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.அப்போதிருந்து, தனி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் இயங்குகின்றன. தற்போது லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் துவங்கப்பட்டு விட்டன.தற்போது பயன்படுத்திய புதிய வாக்காளர் பட்டியலை ஆதாரமாகக் கொண்டு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்ப, வார்டு வாரியாக புதிய பட்டியல் தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.கோவை மாநகராட்சிக்கு, 100 வார்டுகளுக்கான பட்டியல் தயாரிக்க வேண்டும்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார்படுத்த வேண்டும். லோக்சபா தேர்தலில், ஓட்டளித்ததை உறுதி செய்வதை அறிய, 'விவி பேட்' கருவி பயன்படுத்தப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை, அடுத்த மாதம், 23ம் தேதியே நடைபெற உள்ளது.அதன்பின், குறிப்பிட்ட காலத்துக்கு அம்மெஷின்களில் உள்ள தகவல்களை அழிக்காமல், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தை கடந்த பின்பே, மத்திய தேர்தல் கமிஷன் அனுமதியோடு, வேறு தேர்தலுக்கு பயன்படுத்த முடியும்.எனவே, 'விவி பேட்' பொருத்த முடியாத, பழைய இயந்திரங்களையே பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.
தற்போதைக்கு முதல்கட்டமாக, வார்டு வாரியாக ஓட்டுச்சாவடிகள் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:2016ல் உள்ளாட்சி தேர்தல் நடத்த முன்னேற்பாடு செய்தபோது, 1,197 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. கோவை லோக்சபா தேர்தலில் பயன்படுத்திய வாக்காளர் பட்டியலில், 2.80 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்ந்திருந்தனர்.இப்பட்டியல் படி, வார்டுவாரியாக பட்டியல் தயாரித்தால், வாக்காளர் எண்ணிக்கை மாறுபடும். மாநகரப் பகுதியில், 1,400 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கப்படும். வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், கூடுதலாக ஓட்டுச்சாவடி உருவாக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
அதனால், வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை பிரித்து, ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்த, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதம் அவகாசம் கேட்டுள்ளதால், ஜூனில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. அக்., இறுதியில் நடத்தவே வாய்ப்புகள் அதிகம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை பிரித்து, ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்த, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதம் அவகாசம் கேட்டுள்ளதால், அக்., இறுதியில் தேர்தல் நடத்தவே வாய்ப்புகள் அதிகம்.தவறில்லாத பட்டியலே தேவை2014 லோக்சபா தேர்தலில், 5.47 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்கவில்லை. இம்முறை, 7 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்கவில்லை. அதனால், வாக்காளர் பட்டியலே தவறு என்கிற எண்ணம் மேலோங்கியுள்ளது. எனவே, 100 சதவீதம் தவறில்லாத, புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க, மாநில தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில், அந்தந்த பகுதி வாக்காளர்கள் ஓட்டளித்து, தகுதியான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியும்.