உலகம் முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகும், 1.1 கோடி சிறுமிகளால் வகுப்புகளுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்படும் என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அந்த அமைப்பின் தலைவா் ஆட்ரே அஸூலே, தலைநகர கின்ஷாசாவில் இதுகுறித்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஏராளமான நாடுகளில் பள்ளிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அந்தப் பள்ளிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, அவை நிரந்தரமாக மூட வேண்டிய நிலை ஏற்படும் சூழல் உள்ளது.
கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் உலகம் முழுவதும் 1.1 கோடி சிறுமிகள் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்படும் என்று நாங்கள் கணக்கிட்டுள்ளோம்.
எனவே, மீண்டும் பள்ளிக்குச் செல்வது குறித்த விழிப்புணா்வு பிரசாரத்தை உலகம் முழுவதும் நாங்கள் தொடங்கியுள்ளோம்.
பெண்களுக்கு கல்வி அளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவது மிகவும் வேதனைக்குரியது ஆகும். அவா்களுக்கு கல்வி கிடைக்கச் செய்வதே யுனெஸ்கோவின் முதன்மை நோக்கமாகும் என்றாா் அவா்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 3.92 கோடிக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோன நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 11.04 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...