நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக முன்னாள் நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வின் சாதக, பாதகங்களை ஆராய்ந்து இந்த குழுதான் அறிக்கை அளிக்க உள்ளது.
இந்த குழு கொடுக்கும் அறிக்கையின்படி தீர்மானம் நிறைவேற்றி, அதற்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் வாங்கி, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறலாம் என்று தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இருந்தது.
திட்டம்
ஆனால் தமிழ்நாடு அரசின் இந்த நீட் ஆராய்ச்சி குழுவிற்கு சென்னை ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. நீட் குறித்த ராஜன் குழுவிற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் தமிழ்நாடு பாஜக தொடுத்த வழக்கில், நீட் தேர்வு குறித்து ஆராய்ச்சி செய்ய எப்படி குழு அமைக்கலாம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது எப்படி குழு அமைக்கலாம். இதற்கு உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டதா என்று சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்விகளை எழுப்பியது.
கேள்வி
இது தமிழ்நாடு அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ராஜன் குழு அறிக்கை மூலம் தீர்மானம் நிறைவேற்றி அதன் மூலம் நீட் தேர்வுக்கு விலக்கை பெறுவது கஷ்டம் என்றே கூறப்படுகிறது. எனவே தமிழ்நாடு திமுக அரசு வேறு அஸ்திரத்தை கையில் எடுத்தால் மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும். அதன்படி அதிமுகவின் அஸ்திரம் ஒன்றையே கையில் எடுத்து, அதை வைத்தே நீட் தேர்வுக்கு விலக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
விலக்கு
உச்ச நீதிமன்றத்தில் முந்தைய அதிமுக அரசு நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடுத்து இருந்தது. 2020 ஏப்ரல் மாதம் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த மனுவில் நிறைய குறைபாடு இருந்ததால் அப்போது வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை. அதன்பின் மனுவில் திருத்தம் மேற்கொள்ளாமல் தமிழ்நாடு அதிமுக அரசு காலம் தாழ்த்தியது.
காரணம்
பல்வேறு காரணங்களால் இந்த மனுவில் அதிமுக அரசு திருத்தம் மேற்கொள்ளவில்லை. அதன்பின் கடைசியாக செப்டம்பர் 2020 இறுதியில்தான் மனுவில் திருத்தம் செய்யப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிரான இந்த வழக்குதான் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் தமிழ்நாடு அரசு என்று வகையில் இனி திமுக அரசு வாதம் செய்ய வேண்டும். இந்த வழக்கில் முறையான வாதங்களை வைப்பதன் மூலம் நீட் தேர்வுக்கு எதிராக திமுக அரசு காய் நகர்த்த முடியும்.
வாய்ப்பு
உச்ச நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையாமல் தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டு, வலுவான திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அதோடு முன்னாள் நீதிபதி ராஜன் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையை இந்த வழக்கில் தாக்கல் செய்ய வேண்டும்.
தீர்மானம்
இதன் மூலம் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு முறையான வாதங்களை வைத்து சட்ட ரீதியாக நீட் விலக்கிற்கு எந்த தடையும் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். இதில் தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு குறித்தும் வாதம் வைக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை நடக்கும் போது, தமிழ்நாடு அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அது இன்னும் வலு சேர்க்கும். இதனால் சட்ட ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் நீட் தேர்வு விலக்கிற்கு தடங்கல் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
உச்ச நீதிமன்றம்
சென்னை ஹைகோர்ட்டும் உச்ச நீதிமன்றத்தில் இந்த நீட் குழு குறித்து அனுமதி கேட்டீர்களா என்றுதான் கூறி உள்ளது. இதனால் நேரடியாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி, அங்கேயே நீட் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இதுவே தற்போது நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கு சட்ட பூர்வமாக இருக்கும் வழியாகும். தமிழ்நாடு அரசும் இந்த மெகா பிளானில் இருப்பதாகவே தெரிகிறது.
பிளான்
நீட் தேர்வு வழக்கில் சென்னை ஹைகோர்ட் தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேசி இருந்தாலும், இதற்கு முறையான விளக்கம் அரசு சார்பாக ஹைகோர்ட்டில் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. நீட் தேர்வு குறித்து ஆராய குழு அமைப்பதற்காக உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கேட்கவேண்டியது இல்லை என்று தமிழ்நாடு அரசு வாதம் செய்ய உள்ளது. சில முக்கிய ஆதாரங்களை சமர்ப்பித்து, ஹைகோர்ட்டில் தமிழ்நாடு பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹைகோர்ட் வழக்கு சிக்கல் முடிந்த பின் உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீட் வழக்கில் அரசு கவனம் செலுத்தும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...