மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் பின்வரும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்:
* கரோனா பெருந்தொற்று மற்றும் அதன் மூன்றாவது அலை குறித்த அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் அதுபோன்ற நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா?
* அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தருக. இல்லை என்றால் அதன் காரணங்களைத் தருக.
* ஒருவேளை பள்ளி, கல்லூரிகளில் தேர்வை நடத்துவது என அரசு தீர்மானித்தால் அடுத்து வரும் மாதங்களில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் உடல்நலம் மற்றும் உயிர்ப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக அரசு உருவாக்கி இருக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
* மருத்துவப் படிப்புக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வைப் போல கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் அரசிடம் உள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்களை தருக.
ஆகிய கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
அதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் அளித்துள்ள எழுத்துபூர்வமான பதிலில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
* நீட் தேர்வு ரத்து செய்யப்படாது.
* 2021-ம் ஆண்டுக்கான நீட் இளங்கலை, முதுகலைத் தேர்வுகள் முறையே செப்டம்பர் 11, 2021 மற்றும் செப்டம்பர் 12, 2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.
* கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கெனப் பின்வரும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன:
i தேர்வு எழுதுவோர் கூட்டம் கூடுவதையும், தொலைதூரப் பயணத்தையும் தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ii. தேர்வு எழுதுவோருக்கு வழங்கப்படும் அட்மிஷன் கார்டுகள் அவர்கள் சுலபமாகப் பயணிப்பதற்கான இ-பாஸைக் கொண்டிருக்கும்.
iii. தேர்வு மையங்களுக்குள் நுழைவது, வெளியேறுவது ஆகியவை நெரிசல் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்.
iv. அனைத்து மாணவர்களுக்கும் வெப்பநிலை சோதிக்கப்படும். இயல்பு வெப்பநிலையை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
v. முகக் கவசம் அணிவது கட்டாயம். மேலும் முகக் கவசம், ஷீல்டு மற்றும் சானிடைசர் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு கிட் வழங்கப்படும்.
vi. தேர்வு மையத்திற்கு வெளியே கூட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* கலை மற்றும் அறிவியலுக்கான தேர்வுகளை அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் அல்லது மாநில அரசுகளே நடத்துகின்றன.
இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...