தனியார் பள்ளி மாணவர்களைத் தக்க வைக்குமா அரசுப்பள்ளிகள்?


தமிழ்நாடு முழுவதும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 3.40 இலட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்; இவர்களைத் தக்க வைத்துக் கொள்ளத் தேவையான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன என அண்மையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பேச்சில் ஒரு புதிய விடியல் தெரிகிறது. ஆம். உண்மைதான். கோவிட் 19 பெரும் நோய்த்தொற்றுக் காலத்தில் கடைபிடிக்கப்படும் ஊரடங்கில் எந்த வகையிலும் செயல்பட இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டவை கல்வி நிறுவனங்களே. கடந்த கல்வி ஆண்டு முழுவதும் வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் நிகழாத ஆண்டாகவும் நடப்பு ஆண்டிலும் உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய ஒன்றிய, மாநில சுகாதாரத்துறை அமைச்சகமானது, மூன்றாவது நோய்த்தொற்று அலை என்பது குழந்தைகளைத் தாக்கக்கூடும் என்று கடும் எச்சரிக்கையை விடுக்கும் அபாய சூழலே நிலவுகிறது. கடுமையான முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடுகள் மேற்கொண்டு கல்லூரி மற்றும் பள்ளிகளைத் திறக்க முழுமையாக பச்சைக்கொடி இவர்கள் காட்ட மறுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், அவ்வப்போது உருமாற்றம் அடைந்து முன்னைவிட தீவிர தன்மையுடன் இயங்கும் ஆட்கொல்லி தீநுண்மி குறித்த பெரும் அச்சம் மருத்துவ வல்லுநர்களிடையே இன்னும் அகன்றபாடில்லை.


2019-2020 ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் வகுப்பறையில் ஓரளவு கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளில் பங்கெடுத்த மாணவர் ஆண்டு இறுதித்தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதும் அதற்கடுத்த 2020-2021 ஆம் கல்வியாண்டில் பள்ளித் திறக்கப்படாமல் ஒன்றுமறியாமல் இரண்டாம் வகுப்பிலிருந்து மேல் வகுப்பிற்கு தேறியதும் நடந்தேறியது. நடப்பு 2021-2022 ஆம் கல்வியாண்டில் அம்மாணவர் மூன்றாம் வகுப்பு மாணவராவார். இதே நிலை தான் பொதுத்தேர்வு எழுதும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்கள் பல்வேறு புதிய வழிமுறைகளை பின்பற்றி வழங்கப்பட உள்ளது.

இக்காலகட்டத்தில் தொன்றுதொட்டு நடந்துவரும் பள்ளிகளில் வகுப்பு அல்லது பாட ஆசிரியர்களால் நேரிடை வகுப்புகளில் வழங்கப்படும் கற்றல் அனுபவம் மற்றும் அடைவுகள் நவீன தொழில்நுட்ப அணுகுமுறை மூலமாகக் கிடைக்க வழிவகை அரசால் செய்யப்பட்டது. இணையவழிக் கல்வி மற்றும் தொலைக்காட்சி வழிக் கல்வி முறையே ஆசிரியர், மாணவரிடையே மிகுந்த முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. ஊரடங்கின் ஒரு பகுதியாக விளங்கும் பள்ளி அடைப்பு காரணமாக ஐம்பதாண்டு கால வரலாற்றில் கல்வி வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்த தனியார் பள்ளிகள் முதன்முறையாக ஒரு பெரும் அதிர்வையும் அதனைத் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை மற்றும் தக்கவைத்தலில் இமாலய சரிவையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டன. 1990 களுக்குப் பிறகு உலக மயம், தாராளமயம், தனியார் மயம் போன்றவற்றின் காரணமாகப் படித்த நடுத்தர மக்களிடையே செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆங்கில மோகம் மற்றும் தனியார் பள்ளி ஈர்ப்பு ஆகியவற்றால் இஃதே அதிர்ச்சியையும் வீழ்ச்சியையும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சந்திக்கத் தொடங்கின. 

ஏழை எளிய அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை மாணவர்களின் கடைசிப் புகலிடமாக அரசுப் பள்ளிகள் மாறியது வேதனை தரக்கூடிய சேதியாகும். போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை, ஆசிரியர் பற்றாக்குறை, கற்றல் கற்பித்தலில் பெற்றோரிடையே எழுந்த அதிருப்தி, அக்கறையின்மை, கற்றல் அடைவு மற்றும் தேர்ச்சியில் திருப்தியின்மை, எல்லாவகையிலும் நலிவுற்றோருக்கானது அரசுப்பள்ளி என்கிற தாழ்வுணர்ச்சி, நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாமை, ஒரு சில நெறிபிறழ் ஆசிரிய சமூகத்தினரின் விரும்பத்தகாத செயல்கள் மீதான அருவருப்பு முதலான காரணிகள் படித்த நடுத்தர வர்க்கத்தை வெகுவாகப் பாதித்தது. அரசுப்பள்ளி மீதான அக்கறையும் ஈடுபாடும் முற்றிலும் குறைந்து போனது. புதுமையான உணவு, பகட்டான உடை, ஆடம்பர வாழ்க்கை வரிசையில் ஆங்கிலவழிக் கல்வி உயர்நடுத்தர மற்றும் நடுத்தர மக்களிடையே மலிய ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. நல்ல ஆங்கிலவழிக்கல்வி மூலமாக மனித சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் சாதியத்தை எளிதில் கடந்து விட முடியும் என்ற நம்பிக்கையும் ஒரு காரணியாக அமைந்தது. அரசுப்பள்ளி படிப்பு அவமானம் மற்றும் இழிவு என்பதாகக் கருதப்பட்டதும் ஒரு காரணமாகும்.

21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய ஒன்றிய அளவிலான மாபெரும் நாடு தழுவிய கல்வி முழக்கமான அனைவருக்கும் கல்வி இயக்கம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான அரசுப் பள்ளிச் சூழலையும் ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டது. பள்ளிப் புறக்கட்டமைப்பு வசதிகளும் தகுதி வாய்ந்த ஆசிரியர் பணியிடங்களும் வெகுவாக இதனால் உருவாக்கப்பட்டன. பாடப்புத்தகங்கள் திருத்திய அமைக்கப்பட்டன. கற்பித்தலில் பல்வேறு புதிய அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி எண்ணற்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. பள்ளிப் பழுது சரிபார்ப்பு மற்றும் பள்ளிக்குத் தேவையான புதிய பொருட்கள் பெற அரசின் சார்பில் போதுமான ஆண்டுதோறும் நிதியுதவி அளிக்கப்பட்டது. எனினும், அரசுப்பள்ளிகள் பொதுமக்கள் எதிர்பார்க்கும் தன்னிறைவை இன்றளவும் எட்ட முடியாத அவலநிலையிலேயே இருப்பது சாபக்கேடு.

முறையான கண்காணிப்பும் மக்கள் வரிப்பணம் மீதான உள்ளார்ந்த அக்கறையற்ற தணிக்கைப் போக்கும் முறைகேட்டில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப்படாத நிலையும் அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் மானியம் பயனற்று மோசடியான பண செலுத்துச் சீட்டு மூலம் வீணாவது இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட வேண்டும். மிகுதியான அடிப்படை வசதிகளுடன் தன்னிறைவு அடைந்த அரசுப்பள்ளிகள் தமிழ்நாட்டில் இல்லாமல் இல்லை. அவற்றின் எண்ணிக்கை மிகக் குறைவு. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் அடிப்படை குறிக்கோள் வெற்றி பெற முடியாமல் போனதற்கு மற்றுமொரு முக்கிய பங்குண்டு. அதாவது, பாடம் கற்பிக்கும் தலைமையாசிரியர் வசம் கிராமக் கல்விக் குழு மூலமாகப் பள்ளிக் கட்டுமானப் பணிகளை ஒப்படைத்தது என்று அறுதியிட்டுக் கூறமுடியும். தெரிந்த வேலையை விட்டவர்களும் தெரியாத பணியைத் தொட்டவர்களும் கெடுவார்கள் என்பர். அதுபோல, தமக்கு சம்பந்தமில்லாத கட்டுமானப் பணிகளை அரசின் அறிவுறுத்தலின் பேரில் கையிலெடுத்து காசு பார்த்தவர்களும் உண்டு. தம் சொந்த பணத்தை இழந்தவர்களும் உண்டு. 

இதுதவிர, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பில் முதல் வகுப்பு முதற்கொண்டு மேனிலைக்கல்வி முடிய அரசுப் பள்ளிகளில் படித்தோருக்கு மட்டும் அரசால் வழங்கப்படும் 20 விழுக்காடு இடஒதுக்கீடு சலுகையை அண்மையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உறுதிசெய்துள்ளது. இதுவும் அரசுப்பள்ளிகள் நோக்கி படித்த, நடுத்தர வர்க்கம் திரளாகப் படையெடுக்க ஒரு காரணியாக அமைவதை எளிதில் புறந்தள்ளி விட முடியாது. பொதுமக்கள் பலரது ஏகோபித்த குரலாக ஒலிக்கும், அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் கட்டாயம் படிக்க வேண்டும் என்பது இந்த முழு ஊரடங்கு நோய்த்தொற்று காலத்தில் தான் சாத்தியமாகி உள்ளது. சுய விருப்பம், சலுகைகளை எதிர்பார்ப்பு, ஒப்புக்கு நடத்தப்படும் இணையவழிக் கல்விக்கு எதற்கு தேவையில்லாமல் கட்டணம் செலுத்தி ஏமாற வேண்டும் என்ற எண்ணம், நோகாமல் கிடைத்திடும் இலவச தேர்ச்சிக்கு அரசுப்பள்ளி ஆனாலென்ன? தனியார் பள்ளி ஆனாலென்ன? என்னும் மனப்பாங்கு போன்றவை இந்த திடீர் மனமாற்றத்தின் உள்ளக்கிடக்கையாக இருப்பது மறுப்பதற்கில்லை. மாணவர்கள் எண்ணிக்கையில் தொடர்ந்து நலிவுற்று வரும் அரசுப்பள்ளிகளுக்கு மீளவும் ஒரு புத்துயிர் கிடைத்திருப்பது மகிழ்ச்சியே ஆகும்.

எனினும், படித்த மற்றும் பாமர பொதுமக்களிடையே இப்படி ஒரு கண்ணோட்டமும் அச்ச உணர்வும் எழாமல் இல்லை. அதாவது, ஊரடங்கு முழுவதும் விலக்கிக் கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் இயல்பு நிலை திரும்பும் பட்சத்தில் அரசுப்பள்ளிகள் நோக்கி படையெடுத்தோர் மீண்டும் ஏற்கனவே கல்வி பயின்ற தனியார் பள்ளிகளுக்குச் செல்ல மாட்டார்கள் என்பதற்கு ஒரு உறுதிப்பாடும் இல்லை. இதுகுறித்து ஆசிரியர்கள் மத்தியில் ஒருவித அவநம்பிக்கை மற்றும் பதட்டம் நிலவி வருவதும் கண்கூடு. ஏனெனில், தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டு நிலுவை மற்றும் நடப்பாண்டு முதல் தவணைக் கட்டணம் செலுத்த முடியாதோர் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழ் பெற வழியின்றித் தவித்த பெற்றோர்களின் சிரமங்களைக் கருதி அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கு மாற்றுச் சான்றிதழ் கட்டாயம் அல்ல என்று ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதார் எண், செல்பேசி எண், பிறந்தநாள் மற்றும் மாணவரின் கல்வி மேலாண்மை அடையாள எண் இவற்றுள் ஏதேனும் ஒன்றை வைத்துக்கொண்டு கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையத்தின் மூலமாக உள்ளீடு செய்து மாணவர் விவரங்களைப் பெற்று தன்னிச்சையாக மாணவர் சேர்க்கையை தற்போது உறுதிப்படுத்திட முடியும். 

அதேவேளையில், பல்வேறு புறக்காரணிகளால் உந்தப்பட்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது மாதிரி தனியார் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் தொடர் அழைப்புகள், விடா நச்சரிப்புகள், கவர்ச்சிகரமான சலுகைகள் முதலானவற்றால் நிகழும் இயற்பியல் மாற்றங்களால் மீளவும் தனியார் பள்ளி நோக்கி ஓட்டமெடுப்பது நிகழுமேயானால், மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி அவர்களும் இணையத்தில் மாணவர் சேர்க்கையை மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்ள அதிகம் வாய்ப்புண்டு. 

நேரடி கள ஆய்வில் நகர்ப்புற படித்த, பணம்படைத்தவர்கள் கூட தம் பிள்ளைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அரசுப்பள்ளிகளில் தம் குழந்தைகளை விருப்பத்துடன் சேர்த்து வருவதை பல்வேறு ஊடகங்கள் வழி அறியமுடிகிறது. ஆனால், கிராமத்தில் வசிக்கும் படித்த, வறிய நிலையில் வாழும் பெற்றோர்களிடையே புரையோடிக் கிடக்கும் அரசுப்பள்ளி மீதான தப்பெண்ணம் விலகியபாடில்லை. அவர்களது குடியிருப்பில் உள்ள முன்னொரு காலத்தில் அவர்கள் கல்வி பயின்ற அரசுப் பள்ளியில் தம் குழந்தைகளை மனமுவந்து சேர்க்க விரும்பாதது வியப்பாக உள்ளது. மணிக்கணக்கில், நாள் கணக்கில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பேச வேண்டி இருக்கிறது. அரசுப்பள்ளியில் படிப்பதால் கிடைக்கும் நற்பலன்களை எடுத்துக் கூறினாலும் ஆழ்ந்த யோசனைக்குப் பின் ஏதேனும் ஒன்றுக்கும் உதவாதப் பதிலைச் சொல்லி எளிதாகக் கடந்து போவது வருந்தத்தக்க சேதியாகும்.

மாணவர் சேர்க்கைக்கு இடமில்லாத பள்ளி, ஐம்பது, நூறு, ஐந்நூறு, ஆயிரம் சேர்த்த பள்ளி, தம் குழந்தைகளின் சேர்க்கைக்காகப் பெற்றோர்கள் ஏங்கிக் கிடக்கும் பள்ளி, நல்லாசிரியர் பெருமக்களைப் பெற்ற பள்ளி, தரமான கல்வி போதிக்கும் அருமையான பள்ளி, தகவல் தொழில்நுட்பத்தில் தலைசிறந்து விளங்கும் பள்ளி என சமுதாயத்தில் நன்மதிப்பைப் பெற்ற அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கை பெருமளவில் இல்லை. ஒரு வட்டாரத்தில் இதுபோன்ற அரசுப்பள்ளிகளின் விழுக்காடு 20-30 வரை மட்டுமேயாகும். ஏனைய பள்ளிகளின் நிலை கவலைக்குரியதாக இருப்பது சாபக்கேடு.

ஈராசிரியர் பள்ளிகளில் பெரும்பாலும் ஓராசிரியர் மட்டுமே பணிபுரியும் தன்மை, காற்றோட்டமில்லாத வகுப்பறைகள், பாதுகாப்பான கழிப்பிட மற்றும் குடிநீர் வசதியற்ற நிலை, தகவல் தொழில்நுட்ப பற்றாக்குறை பயன்பாடு, ஏதேனும் ஒரு காரணத்தால் அனைத்து ஆசிரியர்களும் வார நாட்களில் பள்ளியில் இல்லாதிருத்தல், நீண்ட மருத்துவ விடுப்பு, முக்கால் கல்வியாண்டு முழுவதும் துய்க்கும் மகப்பேறு விடுப்பு, இறப்பு மற்றும் மாறுதல் காரணமாக ஏற்படும் காலிப்பணியிடம் போன்றவற்றிற்கு பதிலி மற்றும் மாற்று ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்காமை முதலான காரணிகள் அரசுப்பள்ளிகள் மீதான நன்மதிப்பைச் சீர்குலைக்கின்றன. 

தவிர, குடி நோயாளிகள் ஆகிப்போன பணிக்கு வரும் அல்லது எந்தவொரு காரணமும் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் வாராமல் போகும் ஆசிரியர்களால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி இருப்பது உண்மை. இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க விழையும் தலைமையாசிரியரிடமிருந்து சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள கல்வி அலுவலர்கள் குற்றமிழைக்கும் ஆசிரியர்களிடமிருந்து மறைமுகமாகப் பணச்சலுகை பெற்று காப்பாற்ற முனைவது கொடுமையாகும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் இதுபோன்று பத்துக்கும் மேற்பட்ட நபர்களை நிச்சயம் அடையாளம் காண முடியும். இது மனசாட்சியுடன் பள்ளிக்கு தினசரி வருகை புரிந்து மாணவர்களுக்காக உழைப்போருக்கு பெரும் அயர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. மட்டுமல்லாமல் பெற்றோர்களிடையே ஒருவித ஐயப்பாட்டையும் ஏனையோர் மீதான வெறுப்புணர்வையும் தோற்றுவித்து வருவது சிந்திக்கத் தக்கது. 

இதுபோன்று தொடர்ந்து தவறிழைக்கும் நபர்களுக்குக் கட்டாய ஓய்வும் கையூட்டு பெற்று காப்பாற்ற உதவிடும் கல்வி அலுவலர்களுக்குக் கடுங்காவல் தண்டனையும் கல்வித்துறை வழங்குவது அவசர அவசியமாகும். மேலும், கடந்த காலத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட தொட்டுணர் வருகைப் பதிவு (Bio metric Attendance) முறையால் நல்ல பலன் கிட்டியது. இதனால், ஆசிரியர்களிடையே மலிந்து காணப்படும் கால தாமத வருகை, ஏனோதானோ வருகை, பெயருக்குப் பள்ளிக்கு வந்து பின் சொந்த அலுவல்களுக்காக வெளியேறும் போக்கு, வார வேலைநாட்களில் ஓரிரு நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வரும் நிலை, அலுவல் பணி நிமித்தம் என்று பொய் கூறி வாராதிருத்தல் முதலான தவறுகள் பெருமளவில் குறைந்தன. இதன் காரணமாக ஆசிரியர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு மாணவர்கள் பலர் குறித்த நேரத்தில் பள்ளிக்கு நாள்தோறும் வருகை புரியத் தொடங்கியது நல்ல முன்னேற்றமாகும்.

பள்ளியின் வளர்ச்சியில் தனிநபரின் தியாகச் செயல்கள் ஓரளவே துணை நிற்கும். முழு வளர்ச்சிக்கும் அனைத்து ஆசிரியர்களின் கூட்டு முயற்சி ஒன்றே மகத்தான பலனைத் தரும். குறிப்பாக, ஒரு பள்ளியின் நிர்வாகத் தலைவராகத் திகழும் தலைமையாசிரியர் என்பவர் அனைவருக்கும் முன்மாதிரி ஆவார். ஒவ்வொரு தலைமையாசிரியர் பணித்திறம் குறித்தும் தலைமைத்துவம் பற்றியும் கல்வி அலுவலர்கள் விருப்பு வெறுப்பின்றிக் கண்காணித்து நீதிநெறி வழுவாமல் பாராட்டுதல், அறிவுரை கூறுதல், அறிவுறுத்துதல், தண்டனை வழங்குதல் உள்ளிட்டவற்றைச் சரியாகக் கடைபிடித்து வருவார்களேயானால் எப்பேர்ப்பட்ட பள்ளியும் நல்ல முன்னேற்றம் காணும். 

அதுபோலவே, ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியரின் உரிய, உகந்த செயல்முறைகளுக்கு ஏனையோர் கட்டுப்பட்டவர்கள் ஆவார்கள். எந்தவொரு தனிப்பட்ட ஆசிரியரும் உரிய வழியின்றிக் தம் கல்வி அலுவலரை நேரில் சென்று பணி நிமித்தம் சந்திப்பது சரியல்ல. அதுவே, பல்வேறு முறைகேடுகளுக்கும் கீழ்ப்படிதலற்ற போக்குகளுக்கும் அடிகோலுகிறது. அதேநேரத்தில், உதவி ஆசிரியர்களின் நியாயமான கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்கு உள்நோக்கத்துடன் தலைமையாசிரியர்கள் முட்டுக்கட்டை போடுவதை ஏற்கவியலாது. கல்வி மற்றும் மாணவர் நலன் ஒன்றே பள்ளியின் தலையாயக் குறிக்கோளாக இருப்பதை அனைவரும் உறுதி செய்வதென்பது இன்றியமையாதது.

இதுபோன்ற நன்னடத்தைகள், நற்செயல்கள், முன்னெடுப்புகள் போன்றவற்றால் மட்டுமே வாராது வந்த மாமணி போல் விளங்கும் புதிய பெற்றோர்களின் இதயங்களில் அரசுப்பள்ளிகள் சிம்மாசனமிட்டு அமரும். ஏனெனில், ஆசிரியர் பணியிடங்கள் என்பது கூடுதல் மாணவர் சேர்க்கையை அடிப்படையாகக் கொண்டது. மாணவர் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்களும் குறைக்கப்பட்டு விரைவில் மூடும் நிலையில் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் இருப்பது வருத்தத்தைத் தரவல்லது. அனைத்து வகையான அடிப்படை வசதிகளையும் பள்ளிகளில் படிப்படியாக ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து அரசு முனைப்புக்காட்டி வருவது அறிந்ததே. பெற்றோர்களும் துணிந்து தம் பிள்ளைகளை அரசுப்பள்ளிகள் மீது நம்பிக்கை வைத்து மாறிவருவதும் ஒரு மைல்கல் ஆகும். இலட்சக்கணக்கில் வந்து சேர்ந்துள்ள தனியார் பள்ளி மாணவர்களைத் தக்க வைப்பது என்பது ஆசிரியர்களின் அயராது உழைக்கும் கரங்களில் மட்டுமே உள்ளது.

எழுத்தாளர் மணி கணேசன்
1 Comments:

 1. பள்ளிக்கல்வித்துறையும் விரைவில் பதிலும்
  1.ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு – விரைவில்
  2. முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு - விரைவில்
  3. இலவச நோட்டு , காலனிகள் – விரைவில்
  4. பட்டதாரி , இடைநிலை ஆசிரியர் நியமனம் – விரைவில்
  5. கலை ஆசிரியர் நியமனம் – விரைவில்

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive