PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

Kalvi TV - English Medium Videos? ஆங்கில வழிக் கல்வி வீடியோக்கள் அதிகம் வெளியிடப்படுமா?

 


 ஆங்கிலவழி(லி)க் கல்வி😔

மீண்டும் பள்ளிகள் எப்போது திறப்பார்கள் என்று தெரியாது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை வழக்கம்போல் தொடங்கிவிட்டார்கள்.

அரசு மற்று அரசு உதவி பெறும் மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சியில் வகுப்புகள் வாரியாகப் பாடவேளைகள் பிரிக்கப்பட்டு பாடங்கள் நடத்தப் படுகின்றன.

ஒன்று முதல் பதினோறாம் வகுப்புகள் வரை பாடங்கள் நடத்தப் படுகின்றன. பன்னிரெண்டாம் வகுப்புக்கான பாடங்கள் பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. ஒருவேளை பன்னிரெண்டாம் வகுப்புக்கு லேப்டாப்புகள் வழங்கப்படுவதால் அதைக் கணக்கிட்டு நேரடியாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படலாம் என்பது என் அனுமானம்

ஆனால் இதுவரை சொன்னது எல்லாமே தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு மட்டுமே. தனியார் பள்ளிகளைப் பொருத்தவரை பிரச்சனை இல்லை அவர்கள் ஆன்லைனில் ஆங்கில வழியிலோ தமிழ் வழியிலோ வழக்கமாகப் பள்ளியில் பாடம் எடுப்பதுபோலவே அந்தந்த வகுப்பாசிரியர்களைக் கொண்டு நடத்திவிடுவார்கள்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியும் இருக்கிறது. ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை இருப்பவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்றாலும் ஆறாம் வகுப்புக்கு மேல் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் கற்பவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஐந்தாம் வகுப்புவரை அருகில் இருக்கும் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்துவிட்டு அதற்குமேல் கட்டணம் கட்ட வசதி இல்லாமல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நாடியவர்கள்.

இதுவரை இவர்களுக்கான பாடங்கள் எப்படி நடத்தப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வந்ததாகத் தெரியவில்லை. அவர்களும் கல்வித் தொலைக்காட்சியின் பாடங்களையே கவனிக்க அறிவுறுத்தப் படுகிறார்கள்.

ஊரகப் பகுதிகளில் இருக்கும் தனியார் பள்ளிகளின் கல்வித்தரம் என்பது சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதுதான் உண்மை. இங்கே ஆங்கில வழிக் கல்வி என்பது ஆங்கிலத்தில் இருக்கும் பாடங்களை தமிழில் மொழிபெயர்த்துச் சொல்வதுதான்.  அதிலும் தங்லீஸ்தான். ”இதிலேர்ந்து இதை சப்ட்ராக்ட் பண்ணி இந்த ஃபார்ம்லாவ அப்ளை பண்ணோம்னா இந்த ஈகுவேஷன் டேலி ஆகிடும் ஸோ எல் ஹெச் எஸ் ஈக்குவல்டு ஆர் ஹெச் எஸ் நு ரைட் பண்ணி சம்மை முடிச்சிடணும்”.

தேர்வுக்கான தயாரிப்பு என்பது ஆங்கிலத்தில் இருக்கும் விடைகளை மனப்பாடம் செய்து எழுதுவது மட்டுமே. தாங்கள் வகுப்பில் புரிந்துகொண்ட எந்த விஷயத்தைப் பற்றிய கேள்வி இது என்று தெரியாமலே கேள்வியில் இருக்கும் குறிப்பிட்ட வார்த்தைகளைக் கொண்டு கேள்வியை உத்தேசித்து மனப்பாடம் செய்த விடைகளை எழுதுவது, இதிலும் சொந்தமாக ஒரு வாக்கியம் கூட இவர்களால் எழுத முடியாது. தேர்ந்தெடுத்து விடை எழுதுக எனும்போதும் இந்த நான்கு விடைகள் இருந்தால் நான்கில் இதுதான் விடை என்று மனப்பாடம் செய்து கொள்வார்கள். நீண்ட வாக்கியத்தில் இருக்கும் கேள்வியைப் படிப்பதுகூடக் கிடையாது.

இதை கேலியாகவோ இகழ்ச்சிக்காகவோ சொல்லவில்லை மொழி அறிவும் கிடைக்காமல் பாட அறிவும் கிடைக்காமல் தடுமாறும் பிள்ளைகளைப் பார்த்து நொந்துபோய்த்தான் சொல்கிறேன். சில வருடங்கள் வீட்டில் ட்யூஷன் எடுத்தபோது இங்கிருக்கும் நான்கு ஐந்து தனியார் பள்ளி மாணவர்கள் மூலமும் என் பிள்ளைகள் மற்றும் உறவினர் பிள்ளைகள்  மூலமும் கிடைத்த அனுபவத்தைக் கொண்டே சொல்கிறேன்

தமிழ் ஒரு பாடம் மட்டுமே என்பதால் அதையும் மனப்பாடம் செய்தே எழுதுகிறார்கள். இதில் பாடம் புரியும் என்றாலும் பிழையின்றி தமிழிலும் சொந்தமாக எழுத வருவதில்லை. வல்லின மெல்லினப் பிழைகளும் வாக்கியப் பிழைகளுமாகவே இருக்கும். ஆங்கிலத்தில் பாடத்தில் இருப்பது தவிர வெளியில் இருக்கும் எந்த வாக்கியத்தையும் இவர்களால் வாசிக்க முடியுமே தவிர பொருள் புரிந்துகொள்ள முடியாது. தாங்கள் சொல்ல நினைப்பதை எளிய வாக்கியங்களாகக்கூட எழுதவோ பேசவோ தெரியாது. வாட்சப்பிலும் மற்ற எதிலும் இவர்கள் பயன்படுத்தும் ஆங்கில எழுத்துக்களில் தமிழ் என்னும் முறையைப் பார்க்கும்போது, எழுத்துரு அழிந்து பேச்சுவழக்கு மட்டுமே இருக்கும் எழுத்துக்கு இன்னொரு மொழியைச் சார்ந்திருக்கும் சில மொழிகளின் ஞாபகம் வந்து அச்சுறுத்தும். சற்றே அதீத கவலைதான் என்றாலும் நடந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

போட்டித் தேர்வுகளில் சுற்றி வளைத்துக் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் கிராமப்புற மாணவர்கள் திணறுவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். இந்தச் சிக்கல் ஒருபுறம் இருக்க, தற்போது கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் தமிழ் வழி வகுப்புகளைக் கவனிக்கும் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினை வேறு விதம். என்னதான் ஆங்கிலத்தில் இருக்கும் பாடங்களை தமிழில் விளக்கம் சொல்வதாகவே இவ்வளவு நாள் படித்திருந்தாலும், பெயர்ச்சொற்கள் பாடங்களில் வரும் சிறப்புக் குறியீட்டுப் பெயர்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில் சொல்லியே பழகியவர்கள், தூய தமிழில் இருக்கும் சொற்கள் என்னவென்றே புரியாமல் தடுமாறுகிறார்கள்.

உதாரணமாக…. கணிதத்தில் சார்புகள் என்றொரு பாடம், ஆங்கிலத்தில் அது ஃபங்ஷன்ஸ் என்ற பெயரில் இருக்கிறது. அறிவியலில் ஒளியியல் ஆங்கிலத்தில் ஆப்டிக்ஸ் என்று வருகிறது. எந்தப் பாடம் நடத்தப்படுகிறது என்றே பார்ப்பவர்களுக்குப் புரிவதில்லை.

அல்ஜீப்ரா, ஈக்குவேஷன், வேரியபிள், கான்ஸ்டண்ட் இப்படிப் படித்துவிட்டு கெழுக்கள், பல்லுறுப்புக்கோவை, சமன்பாடு, மாறி, மாறிலி என்றால் பிள்ளைகள் குழம்பிப்போகிறார்கள்.

தனியார் பள்ளிகளிலும் அனைத்துப் பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதில்லை. தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் நடத்த முன்னெடுத்ததைப் போலவே ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கும் வகுப்புகள் எடுக்க ஏதேனும் ஏற்பாடுகள் செய்யப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரசின் ஏற்பாட்டில் தொலைக்காட்சியில் நடத்தப்படுவதால், வழக்கமான ஆங்கிலத்தை தமிழில் மொழிபெயர்க்கும் முறையில் இல்லாமல்,எளிய ஆங்கிலத்தில் தேவைப்பட்டால் தமிழிலுமாக மாணவர்களுக்குப் புரியும்படி பாடங்கள் சொல்லித்தரலாம். அந்த வீடியோக்களை யூட்யூபில்பதிவேற்றம் செய்யப்படும்போது பள்ளிகள் திறந்த பிறகும் தேவைப்படும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இருக்கும்.
Pakutharaivu annadurai அவர்களின்  முகனூல் பதிவு.

 

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group