
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் 2025-26-ம் கல்வியாண்டில் வட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கான உத்தேச கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை எவ்வித புகார்களுக்கும் இடம் தராதபடி நடத்த வேண்டும்.
அதன்படி சர்வதேச விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டத்தின் கீழ் உலகத் திறனாய்வுப் போட்டிகள் ஜூன் 12-ல் தொடங்கி 31-ம் தேதி முடிவடையும். சர்வதேச யோகா நிகழ்ச்சிகள் ஜூன் 20-ம் தேதி நடைபெறும். 14, 17, 19 வயதுக்குட்பட்டோருக்கான வட்டார அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் ஜூன் 30 முதல் ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறும். இதேபோல் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நடைபெறும்.
தொடர்ந்து மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின முதல்நிலை விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும். இதில் குத்துச்சண்டை, ஜூடோ, நீச்சல், ஸ்குவாஷ், ஜிமினாஸ்டிக், வாள் சண்டை, சிலம்பம், கேரம் உட்பட பல்வேறு போட்டிகள் இடம்பெறும். இதையடுத்து மாநில அளவிலான போட்டிகள் செப்டம்பர் 6 முதல் 9-ம் வரை நடைபெறும்.
தொடர்ந்து இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமத்தின் (எஸ்ஜிஎஃப்ஐ) மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் செப்டம்பர் 24 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும். அதன்பின் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் நவம்பர் 26 முதல் 29-ம் தேதி வரையும், 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகள் டிசம்பர் 3 முதல் 6-ம் தேதி வரையும், 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகள் ஜனவரி 5 முதல் 8-ம் தேதி வரையும் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...