தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி.,யின் பாடப்புத்தகங்களை, தனியார் அச்சகங்கள் அச்சடித்து விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என என்.சி.இ.ஆர்.டி., எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெரும்பாலான சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், என்.சி.இ.ஆர்.டி., பாடப்புத்தகங்களே பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அதிக அளவில் புத்தகங்களை அச்சடித்து, நாடு முழுதும் வினியோகிக்கும் பணியை, என்.சி.இ.ஆர்.டி., செய்கிறது. எனினும், பள்ளிகள் திறக்கும் ஜூன் மாதத்திற்குள், புத்தக விற்பனையாளர்களுக்கு புத்தகம் வினியோகிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
மேலும், புத்தகங்கள் பகுதி பகுதியாக வருவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை பயன்படுத்தி, என்.சி.இ.ஆர்.டி., பாடப்புத்தகங்களை, அங்கீகாரம் பெறாத அச்சகத்தினர் அச்சடித்து விற்பனையாளர்களுக்கு அனுப்புவதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, பைரசி புத்தகங்களை அச்சடிப்பதும், விற்பதும், பதிப்புரிமை சட்டம் 1957ன்படி குற்றம். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, என்.சி.ஆர்.டி., நிர்வாகம், தன் இணைய தளம் வாயிலாக எச்சரித்துள்ளது.
இது குறித்து, புத்தக விற்பனையாளர்கள் சிலர் கூறியதாவது:
என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள் பலருக்கு கிடைக்காமல், தொடர்ந்து கடைக்கு வந்து விசாரிக்கின்றனர். இதை அறிந்த போலி அச்சகத்தினர், அசல் புத்தகங்களை போலவே அச்சடித்து, விற்பனையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு விற்கின்றனர். இதில், வட மாநிலத்தவர்களே அதிகம் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில், கடந்த ஓராண்டில் மட்டும் போலியாக அச்சிடப்பட்டு கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த, 5 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள காகிதங்கள், அச்சு இயந்திரங்கள், லாரிகள் உள்ளிட்டவற்றை, என்.சி.இ.ஆர்.டி., பறிமுதல் செய்துள்ளது. விற்பனையாளர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால், மத்திய அரசுக்கும் என்.சி.இ.ஆர்.டி.,க்கும் வருவாய் இழப்பு ஒருபுறம் இருந்தாலும், தரமற்ற காகிதம், மை உள்ளிட்டவற்றால், மாணவர்களுக்கு உடல்நல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து, பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...