Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

‘ஆடம்பரம்’ ஆகிறதா கல்வி? - படிப்புச் செலவும், சமூக இடைவெளியும்!

hindutamil-prod%2F2026-09-26%2Fgbakeko9%2FClass-Rooms

 
ஒரு வகுப்பறையின் எல்லைகள் வெறும் பாடப் புத்தகங்களோடு முடிவதில்லை. அது ஒரு குடும்பத்தின் பொருளாதார பலத்தையும் சமூக நிலையையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது. கல்வி என்பது எளிய குடும்பங்களுக்கு வறுமையிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு ‘வாழ்வாதாரக் கருவி’. நடுத்தர வர்க்கத்துக்கு அது சமூகத்தில் அடுத்த நிலைக்குச் செல்வதற்கான ‘ஏணி’.

ஆனால், கல்வி என்பது உயரடுக்கு வர்க்கத்தினருக்குக் தங்களின் அதிகாரத்தையும் செல்வத்தையும் தலைமுறைகளாகப் பாதுகாக்கும் ‘சமூக மூலதனம்’.

அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதே கல்வியின் முதன்மை நோக்கம். ஆனால், இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில் கல்வி என்பது ‘அனைவருக்குமான உரிமை’ என்ற நிலையிலிருந்து விலகி, ‘வசதி படைத்தோருக்கான சிறப்புச் சலுகை’ ஆக மாறும் தோற்றத்தை அளிக்கிறது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) சமீபத்தில் வெளியிட்ட மாடுலர் கல்வி ஆய்வு அறிக்கையின்படி, 10% கூடுதல் வருமானம் பெறும் ஒரு குடும்பம் 14% கூடுதலாகக் கல்விக்குச் செலவிடுகிறது. இதில் மிகப் பெரிய தொகையை எடுப்பது தனியார் பள்ளிக் கட்டணமே தவிர, டியூஷன் வகுப்புகள் அல்ல

ஒரு நாட்டின் அரசுப் பள்ளி அமைப்பு பலவீனமடைவதைக் காட்டும் மிகத் துல்லியமான அளவுகோல் என்பது, ‘மக்களின் வருமானம் அதிகரிக்கும்போது தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு மாற்றுவதாகும்’. சமூகச் சமத்துவமின்மையைக் களைய வேண்டுமெனில், தனியார் பள்ளிகளோடு போட்டிபோடும் அளவுக்கு அரசுப் பள்ளிகளைத் தரமாக்குவதே ஒரே வழி என்பதை இவ்வறிக்கை தெளிவுபடுத்துகிறது.

‘ஏங்கெலின் விதி’ உணர்த்தும் பாடம்

பொருளாதாரத்தின் அடிப்படை விதியான பொருளாதார வல்லுநர் ஏங்கெல்ஸின் ‘ஏங்கெலின் விதி’ கூறுவது என்னவெனில், ‘ஒரு குடும்பத்தின் வருமானம் உயரும்போது, அது உணவுக்காகச் செலவிடும் தொகை விகிதாச்சார அடிப்படையில் பெருமளவில் உயர்வதில்லை. மாறாக, சற்று தரமான உணவை உட்கொள்கிறார்கள். மொத்தச் செலவில் உணவுக்கான பங்கு குறைகிறது.’

ஆனால், ஓர் இந்தியக் குடும்பம் தனது வருமானத்தைப் பெருக்கும்போது, உணவைப் போலல்லாமல் தன் குழந்தைகளின் பள்ளிக் கல்விக்காக அதிக விகிதத்தில் செலவிடுகிறது. பொருளாதாரத்தில் செலவின நெகிழ்ச்சி 1-க்கு மேல் சென்றாலே அப்பொருள் ‘ஆடம்பரப் பொருள்’ ஆக மாறிவிடும். இந்தியக் குடும்பங்களின் கல்விக்கான செலவின நெகிழ்ச்சி 1.42 ஆக உள்ளது.

சராசரி குடும்பம் ஓர் ஆண்டுக்கு கல்விக்கான நுகர்வுச் செலவாக ரூ.26,615 செலவிடும்போது, மிக ஏழ்மையான குடும்பங்கள் ரூ.11,700 செலவிடுகிறார்கள். இதுவே பணக்காரக் குடும்பங்கள் ரூ.67,200 செலவிடுகிறார்கள். சராசரி மற்றும் ஏழ்மை குடும்பங்கள் கல்விக்காக வருமானத்தில் 10 சதவீதம் செலவிடும்போது, பணக்காரர்கள் 20% செலவிடுகிறார்கள்.

டியூஷனும் பள்ளியும்

ஏழை மாணவர்களில் இருந்து பணக்கார மாணவர்கள் வரை எடுத்துக்கொண்டால், தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் பங்கு 18%-ல் இருந்து 61% ஆக உயர்கிறது. ஆனால், தனியார் பயிற்சி (Coaching) பெறும் மாணவர்களின் பங்கு 19%-ல் இருந்து 34% ஆக மட்டுமே உயர்கிறது.

உண்மையில், பணக்காரக் குடும்பங்களை விட ஏழைக் குடும்பங்களின் கல்விச் செலவில் கோச்சிங் வகுப்புகள்தான் அதிக பங்கைப் பெறுகின்றன. ஏழ்மையான 10% குடும்பங்கள் கல்விக்காகச் செலவிடும் ஒரு ரூபாயில் பயிற்சி மையங்களுக்கு 18 பைசா செல்கிறது. பணக்காரக் குடும்பங்களில் இது 13 பைசாவுக்கும் குறைவாகவே செல்கிறது. 10% பணக்காரக் குடும்பங்கள், 10% ஏழைக் குடும்பங்களை விட கல்விக்காக ஆண்டுக்கு ரூ.55,553 அதிகமாகச் செலவிடுகின்றன. இந்த இடைவெளியில் 63% (ரூ. 35,120) பள்ளிக் கட்டணம் பிடிக்கிறது.

அரசுப் பள்ளிகளில் மட்டுமே படிக்கும் குடும்பங்களின் செலவின நெகிழ்ச்சி 0.74 ஆகும் (அத்தியாவசியப் பொருள்). தனியார் பள்ளிகளில் படிக்கும் குடும்பங்களின் நெகிழ்ச்சி 0.89 ஆகும்.  ஆனால், இரண்டையும் சேர்த்துப் பார்க்கும்போது நெகிழ்ச்சி 1.42 என உயர்கிறது. ஏனெனில், இந்தியாவில் ஒரு குடும்பத்தின் வருமானம் உயரும்போது அரசு பள்ளியிலிருந்து தனியார் பள்ளிக்கு மாறுகிறார்கள். டியூஷன் என்பது பண நெருக்கடியின்போது நிறுத்திவிடலாம். ஆனால், பள்ளிக் கட்டணத்தை நிறுத்த முடியாத ஒரு ‘கடமை’ ஆகிவிட்டது.

கல்வி ஏன் ‘ஆடம்பரம்’?

தரமான கல்வி கிடைப்பதில் பற்றாக்குறை:

சிறந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் தனித்துவத்தைப் பெற பணக்காரர்கள் எவ்வளவு பெரிய தொகையையும் செலவிடத் தயங்குவதில்லை. ஆனால், ஏழைகளால் முடிவதில்லை.

நிழல் கல்வி அமைப்பின் வளர்ச்சி:

நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் சக்திக்கு அப்பாற்பட்டவை. ஆனால், பணக்காரர்களுக்கு இது எளிதானதாக மாறியுள்ளது.

தலைமுறை இடைவெளி அதிகரிப்பு:

பணக்காரக் குடும்பங்கள் கல்விக்கும் திறன் மேம்பாட்டுக்கும் அதிகமாகச் செலவிடுவதால், அவர்களது குழந்தைகள் சிறந்த வேலைவாய்ப்புகளை எளிதாகப் பெறுகிறார்கள். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அடிப்படை வசதிகள் இல்லாததால் பின்னடைவைச் சந்திக்கின்றனர்.

நிதிச் சுமை - கடன்:

கல்வியை ஓர் ஆடம்பரப் பொருளாக பார்க்கும் சூழலில், நடுத்தரக் குடும்பங்கள் தங்கள் தகுதிக்கு மீறி தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பயிற்சிகளுக்கும் செலவிட்டு கடன் வலையில் வீழ்கின்றன.

அரசு அமைப்புகளின் மீதான நம்பகத்தன்மை குறைதல்:

தனியார் கல்வியில் அதிக முதலீடு செய்யப்படுவதால், அரசு கல்வி நிறுவனங்களின் தரம் மற்றும் நிதி ஒதுக்கீடு கேள்விக்குறியாகிறது

கல்வி என்பது ‘அதிகமாக முதலீடு செய்பவருக்கே சிறந்த பலன்’ என்ற நிலையை எட்டும்போது, அது சமூகத்தில் சமத்துவமின்மையை அதிகப்படுத்துகிறது. சமத்துவமின்மை என்பது பணக்காரப் பெற்றோர்கள் கோச்சிங் கிளாஸுக்கு அதிகம் செலவிடுவதில் இல்லை. மாறாக, அவர்கள் அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து தனியார் பள்ளியை நோக்கி நகர்வதும், அந்த கல்வியை வாங்குவதிலும் இருக்கிறது.எனவே, அரசுப் பள்ளிகளை விட்டு வெளியேறுவது வீண் என்று பெற்றோர் நினைக்கும் அளவுக்கு, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு மற்றும் கற்பித்தல் தரத்தை உயர்த்துவதே இதற்கான ஒரே தீர்வாகும். அப்போதுதான் கல்வியை மீண்டும் அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும் ‘பொதுப் பொருள்’ (Public Good) ஆக மாற்ற முடியும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive